பயங்கரவாதிகளுக்கு பதிலளிக்க எந்த விதிகளும் இல்லை: ஜெய்சங்கர்
பயங்கரவாதிகளுக்கு பதிலளிக்க எந்த விதிகளும் இல்லை: ஜெய்சங்கர்
ADDED : ஏப் 13, 2024 11:11 AM

புனே: ‛‛ பயங்கரவாதிகள் எந்த விதிகளையும் கடைபிடிப்பதில்லை. எனவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எந்த விதிகளும் இல்லை'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: 1947 ல் காஷ்மீருக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ஊடுருவியது. அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்க துவங்கிய போது, அதனை நிறுத்திவிட்டு நாம் ஐ.நா.,விற்கு சென்று, பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று சொல்லாமல், பழங்குடியினர் ஊடுருவியதாக முறையிட்டோம். ஆரம்பம் முதல், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது எனக் கூறியிருந்தால், இன்று நாம் வேறு மாதிரியான கொள்கையை கொண்டு இருப்போம். எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
வெளியுறவுக் கொள்கை 50 சதவீதம் மாறி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அப்போது தாக்குதல் நடத்துவதற்கு அதிகம் செலவாகும் என நினைத்தனர்.
மும்பை தாக்குதல் போன்று இப்போது ஒன்று நடந்து, அதற்கு எதிர்வினையாற்றவில்லை என்றால், அடுத்த தாக்குதலை எப்படி தடுப்பது. எல்லைக்கு அப்பால் இருப்பதால் யாரும் தங்களைத் தொட முடியாது என பயங்கரவாதிகள் நினைக்கக்கூடாது. எந்த பயங்கரவாதியும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. எனவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எந்த விதிகளும் இல்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

