
கர்நாடகாவில் பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு அரசின், 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்படுகிறது. அதேவேளையில், மாநிலத்தில் 1 லட்சம் ஏ.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகளில், 'அரிசி ஸ்டாக் இல்லை' என கடை உரிமையாளர்கள் கையை விரிக்கின்றனர். இதனால், அவர்கள் அரிசி கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஊழியர்கள் கைவிரிப்பு
1 லட்சம் கார்டுதாரர்கள் அரிசி கிடைக்காமல் தவிப்பு
பெங்களூரு, ஜன. 15-
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், படிப்படியாக ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர்.
இதில், ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு, மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அடக்கம்.
அதன்படி அரிசி வழங்கவும் முன்வந்தது. ஆனால், மாநிலத்தில் போதுமான அரிசி உற்பத்தியாகவில்லை. இதனால், மத்திய உணவு பொது வினியோக துறையிடம், கூடுதல் அரிசி வழங்க முறையிட்டது. ஆனால் அத்துறை மறுத்து விட்டது.
இதனால், அண்டை மாநிலங்களில் அரிசி வாங்க கர்நாடக அரசு, பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவும் ஓரளவுக்கு தான் பலன் அளித்தது. இதனால், ஐந்து கிலோவுக்கு அரிசியும், மீதி ஐந்து கிலோ அரிசிக்கான பணத்தையும் 170 ரூபாயாக வழங்கி வருகிறது.
தற்போது மாநிலத்தில் 1.2 கோடி பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசியாகவும்; ஐந்து கிலோவுக்கு பணமாக அவர்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 4.42 கோடி பேர் பயனடைகின்றனர்.
அதுபோன்று, கர்நாடகத்தில் 24 லட்சம் ஏ.பி.எல்., கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில், 1 லட்சம் பேர் தங்களுக்கும் அரிசி வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு வர துவங்கி உள்ளனர்.
இது தொடர்பாக, ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
கர்நாடகாவில் 24 லட்சம் ஏ.பி.எல்., கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் 20,000 கார்டுதாரர்கள் மட்டுமே மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
அரசின் 'அன்ன பாக்யா' திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஏ.பி.எல்., பயனாளிகள், தங்களுக்கும் அரிசி வேண்டும் என ரேஷன் கடைக்கு வர துவங்கி உள்ளனர்.
இதனால், 1 லட்சம் ஏ.பி.எல்., கார்டுதாரர்கள், தங்களுக்கும் அரிசி வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு வழங்க ரேஷனில் அரிசி 'ஸ்டாக்' இல்லை. உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை எவ்வளவு வழங்குகிறதோ, அதை தான் நாங்கள் வினியோகம் செய்கிறோம்.
பி.பி.எல்., கார்டு வைத்திருபோர், மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் பெறலாம். ஆனால், ஏ.பி.எல்., கார்டு வைத்திருப்போர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ரேஷனில் பொருட்கள் வாங்க வேண்டும்.
இதனை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும், ஒவ்வொரு மாதமும் தங்கள் பகுதியில் உள்ள கார்டுதாரர்களின் தேவைக்கேற்ப ரேஷன் வழங்குவோம்.
ஏ.பி.எல்., கார்டு வைத்திருக்கும் ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ அரிசியும்; இரண்டு நபர் கொண்ட குடும்பத்துக்கு பத்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இவை, தலா ஒரு கிலோ 15 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 10 கிலோ வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, அரிசி கிடைக்காமல், பயனாளிகளின் வங்கி கணக்கில் 5 கிலோவுக்கான பணத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒரு லட்சம் ஏ.பி.எல்., கார்டுதாரர்களும், தங்களுக்கும் அரிசி வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு படை எடுப்பதால், அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.