அதானி பெயரில் சம்மன் வரவில்லை; வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
அதானி பெயரில் சம்மன் வரவில்லை; வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
ADDED : நவ 30, 2024 07:50 AM
புதுடில்லி: தொழில் வளர்ச்சிக்காக லஞ்சம் தந்ததாக கூறப்படும் வழக்கில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் சிலருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாகக் வெளியான செய்தியை வெளியுறவு அமைச்சகம் நேற்று மறுத்தது.
அதானி குழும தலைவர் கவுதம் அதானி மற்றும் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதானி நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் நாங்கள் எந்த பேச்சிலும் ஈடுபடவில்லை.
தற்போதைக்கு இது அமெரிக்க நீதித்துறை மற்றும் தனியார் நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரம். அமெரிக்கா தரப்பில் இருந்து கைது வாரன்ட் கோரிக்கை எதுவும் வரவில்லை,” என்றார்.

