கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: கள ஆய்வுக்கு அனுமதித்த உத்தரவு நிறுத்திவைப்பு
கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: கள ஆய்வுக்கு அனுமதித்த உத்தரவு நிறுத்திவைப்பு
UPDATED : ஜன 16, 2024 01:01 PM
ADDED : ஜன 16, 2024 12:58 PM

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், களஆய்வு செய்வதற்கு, அனுமதி அளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
உத்தர பிரதேசத்தின் மதுராவில், கடவுள் கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின்போது இங்கிருந்த ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. கடந்த, 1968ல், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.
ஆனால், மொத்த பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. மசூதி இடத்தில் களஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரா நீதிமன்றம், அனுமதி அளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரா கோவிலிலும் கள ஆய்வு நடத்துவதற்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து முஸ்லிம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று வந்த போது, மசூதியில் கள ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை, மசூதியில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.