ADDED : பிப் 12, 2024 06:32 AM

'நான் யூ - டர்ன் அரசியல்வாதி இல்லை,'' என்று, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி கூறி உள்ளார்.
ம.ஜ.த., தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. நடிகரான இவர், கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் உள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்டு தோற்றார். கடந்த ஆண்டு நடந்த, சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறி இருந்தார்.
ஆனால், மாண்டியா தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என, கட்சி தொண்டர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் நிகில், தேர்தலில் போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் மாண்டியா 'சீட்' டுக்கு ஆசைப்பட்டவன் இல்லை. கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தேன். இந்த முறையும், மாண்டியாவில் என்னை நிறுத்த வேண்டும் என்று, கட்சி தொண்டர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தேர்தலில் நிற்கவில்லை என்று முன்பே கூறிவிட்டேன். இப்படி சொல்லிவிட்டு தேர்தலில் நின்றால் சரியாக இருந்தாது.
'யூ - டர்ன்' அடிக்கும், அரசியல்வாதி நான் இல்லை. எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை பலப்படுத்துவதே எனது நோக்கம். இதனால் மாண்டியாவில் பிரசாரம் செய்து வருகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். குமாரசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. ஓய்வில் இருப்பதால், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -