பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறும் ஒலி மாசு!விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறும் ஒலி மாசு!விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
UPDATED : செப் 19, 2026 04:38 PM
ADDED : செப் 19, 2026 04:32 PM

- சிறப்பு நிருபர் -
டில்லியில், வீட்டின் முன் எழுப்பப்பட்ட அதீத இரைச்சலை தட்டிக்கேட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த இசைக் கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், 47, அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுதும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் ஒலி மாசுபாட்டையும், அதனால் அரங்கேறும் வன்முறைகளையும் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறிவரும் ஒலி மாசு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
தலைநகர் டில்லியில் வசித்த மணிப்பூரைச் சேர்ந்த பிரபல, 'ராக்' இசைக் கலைஞரும், இசை ஆசிரியருமான சோங்தம் விக்ரம் சிங், கடந்த 6ல், தன் வீட்டின் முன், காதை பிளக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் கூச்சலிட்ட கும்பலை அமைதி காக்கும்படி கூறினார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டும் ஹோலி பண்டிகையின் போது, பொதுத்தேர்வுக்கு படித்த மாணவர்களின் நலன் கருதி, ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கக் கோரிய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். சமீப காலமாக பொது கொண்டாட்டங்களில் அதிக சத்தத்துடன் இசையை அலறவிடுவது வாடிக்கையாகி விட்டதோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அதிகரித்துள்ளன.
நாட்டில், டிசம்பர் வரை பண்டிகை காலம் தான். துர்கா பூஜை, நவராத்திரி, சத் பூஜை, கன்வர் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த காலத்தில் நடக்கும்; திருமணங்களும் அதிகளவில் நடக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளில், டி.ஜே., ஒலிபெருக்கிகள், பொது அறிவிப்பு கருவிகள் மற்றும் அதிக சக்தி கொண்ட ஒலி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஊர்வலங்களுக்காக தயார் செய்யப்பட்ட வாகனங்களிலும் அதிக சக்தி கொண்ட ஒலிபெருக்கிகள் பொருத்தப்படுகின்றன. இதனால், ஊர்வலங்கள் செல்லும் பாதைகளில் வசிப்பவர்கள் நீண்ட நேரம் அதிக சத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. பண்டிகைகளை யாரும் குறை கூறவில்லை. எவ்வளவு நேரம், எவ்வளவு சத்தத்தில், எந்த நேரத்தில் இசை ஒலிக்கிறது என்பது தான் முக்கிய பிரச்னை.
இத்தகைய அதிர்வு அலைகள் மனிதர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், துாக்கமின்மை, கேட்கும் திறன் இழப்பு, தீவிர மன உளைச்சலுக்கு வழிவகுப்பதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மனிதர்களை தாண்டி, மஹாராஷ்டிராவின் வாகன போக்குவரத்து இல்லாத மலைவாசஸ்தலமான மாதேரானில், சுற்றுலா பயணியர் பயன்படுத்தும், 'புளூ டூத் ஸ்பீக்கர்'களால் வனவிலங்குகளும், பறவைகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களை சுற்றியுள்ள அமைதி மண்டலங்கள் மற்றும் பொது இடங்களில், இரவு 10:00 முதல் காலை, 6:00 மணி வரை, மூடிய அரங்குகளை தவிர, பிற பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதியில்லை.
மாநில அரசுகள் கலாசார நிகழ்வுகளுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம், 15 நாட்கள் மட்டுமே இதில் விலக்கு அளிக்க முடியும். ஒலி மாசை கட்டுப்படுத்த சட்டங்கள் இருந்த போதும், பல இடங்களில் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. 2024ல், நாடு முழுதும் ஒலி மாசு விதிகளை மீறியதாக, 8,639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ராஜஸ்தானில் மட்டும், 8,264 வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில், 334, உத்தர பிரதேசத்தில், 17, மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.
'மதத்தின் பெயரிலோ, விழாக்களின் பெயரிலோ மற்றவர்களின் துாக்கம், உடல்நலம் மற்றும் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்புவதை அனுமதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. 'வாகனங்களின் ஹாரன் மற்றும் ஒலிபெருக்கி இரைச்சலால் ஏற்படும் பொது சுகாதார பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை' என, லோக்சபாவில், மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. அவற்றை நடத்த எதிர்ப்பு தெரிவிப்பது இந்த பிரச்னையின் நோக்கம் அல்ல. ஆனால், ஒருவரின் கொண்டாட்டம் மற்றொருவரின் துாக்கத்தையும், உடல்நலத்தையும், அமைதியையும் பறிக்கும் நிலை ஏற்படக்கூடாது.
ஒலி அளவு மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரம் தொடர்பான விதிகளை அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும். மக்களும் விதிகளை பின்பற்றி மற்றவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். விழாக்களை கொண்டாடுவோம். அதே நேரத்தில், பிறரின் அமைதியையும் காப்போம்.
