ADDED : மே 31, 2025 05:03 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், தொலை தொடர்பு சேவை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலவில்லை.
இம்மாவட்டத்தில் ஒரு வாரமாக கன மழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி சராசரி மழை 89.74 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 133.9 மி.மீ., மழை பெய்தது.
ஒருவாரமாக பல பகுதிகளில் சிறிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்ட போதும் பலத்த காற்றினால் மரங்கள் ஏராளம் சாய்ந்தன. அவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக ரோடுகளில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து தடை ஏற்பட்டபோதும், பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.
அவ்வப்போது மரங்கள் வெட்டி அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
ஆனால் மின்கம்பங்கள் சீரமைத்து மின் இணைப்பு வழங்குவது மின்வாரியத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் மூலம் பல பகுதிகள் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.
அப்பகுதிகளில் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலவில்லை.
இடுக்கி அருகே அணக்கரை பகுதியில் மின்கம்பங்களை சீரமைப்பதற்கு ஊழியர்கள் சென்ற வாகனத்தின் மீது மரம் சாய்ந்தது. ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
நேற்று மழை சற்று குறைந்த போதும் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டும் பாதிப்புகள் ஏற்பட்டன.
மூணாறு அருகே போதமேடு பகுதியில் ரோடு சேதமடைந்தது. அதேபோல் போடிமெட்டு, பி.எல். ராம் ரோட்டில் மரம் சாய்ந்து வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
அதிகரிப்பு
மாவட்டத்தில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 14 முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி தாலுகாவில் 7 முகாம்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர், தேவிகுளம் தாலுகாவில் 5 முகாம்களில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர், உடும்பன்சோலை தாலுகாவில் 2 முகாம்களில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தங்கியுள்ளனர்.
சேதம்
இம்மாவட்டத்தில் நேற்று மாலை வரை 130 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த்துறையினர் கணக்கிட்டுள்ளனர். அதில் 121 வீடுகள் சிறிய அளவிலும், 9 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன.
பலி
மழையால் கடந்த ஒரு வாரத்தில் 3 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அலர்ட்
இம்மாவட்டத்திற்கு இரண்டு நாட்களாக அதி தீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் இன்று (மே 31) பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
அதன்படி 24 மணி நேரத்தில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடப்பட்டது.