நிற்காத நிதி நிறுவனங்கள் தொல்லை; காங்., அரசு மீது ஜோஷி காட்டம்
நிற்காத நிதி நிறுவனங்கள் தொல்லை; காங்., அரசு மீது ஜோஷி காட்டம்
ADDED : ஜன 27, 2025 10:18 PM

மைசூரு; ''போலீசார் எச்சரிக்கைக்கு பிறகும், கடன் வாங்குவோருக்கு நிதி நிறுவனங்கள் தொந்தரவு கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
போலீசார் எச்சரிக்கைக்கு பின்னரும், கடன் வாங்கியவர்களுக்கு நிதி நிறுவனங்கள் தொந்தரவு கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காவல் துறையை நான் குற்றம் சொல்லவில்லை. மாநில அரசு, ஊழலில் ஈடுபட்டதால் இதெல்லாம் நடக்கின்றன.
பதிவு செய்யப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவை என்பதை மாநில அரசு கவனிக்க வேண்டும்.
சட்டத்தை மீறுவோர் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான விதிகளை விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இவ்விஷயத்தில் போலீஸ் துறைக்கு அதிகாரம் கொடுங்கள். இதில் ஊழல் நடக்கக்கூடாது. இதை விசாரிக்க குழு அமைத்தால், நேர்மையான அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க வேண்டும்.
கடனுக்காக இவ்வளவு வட்டி தான் வசூலிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பினும், பல பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள், கடன் வழங்கி, வசூலித்து வருகின்றன. அவர்களை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதை முந்தைய பா.ஜ., அரசு மீதும், மத்திய அரசு மீதும் பழிபோடும் வேலையை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. மழை அதிகரித்தாலும், குறைந்தாலும், மத்திய, மாநில பா.ஜ., தான் காரணம் என்கின்றனர்.
இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதுடன், காங்கிரஸ் தலைவர்கள் நாற்காலி சண்டையில் மும்முரமாக உள்ளனர்.
'முடா' வழக்கில் எதையாவது செய்து தப்பிக்க சித்தராமையா முயற்சிக்கிறார். கவர்னரின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றம் சென்றார். ஆனால், கவர்னரின் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் தவறாக நினைக்கவில்லை. இருப்பினும் சித்தராமைா, நெறியற்ற முறையில் ஆட்சியில் தொடர்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

