சாராயம், அசைவம் இதெல்லாம் இங்கே தடை! அதிரடி காட்டிய ம.பி., முதல்வர்
சாராயம், அசைவம் இதெல்லாம் இங்கே தடை! அதிரடி காட்டிய ம.பி., முதல்வர்
ADDED : செப் 14, 2024 12:19 PM

போபால்; நர்மதா நதியின் கரையில் புனித நகரங்கள், மத வழிபாட்டு தலங்கள் அருகில் அசைவ உணவுகள், மதுபானங்கள் விற்க தடை செய்யப்படும் என்று மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறி உள்ளார்.
மத்தியபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ், அனைத்துத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தற்கு பின்னர் முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது;
நர்மதா நதியின் வளர்ச்சி குறித்து அமைச்சரவையுடன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி நர்மதா உற்பத்தியாகும் அமர்கண்டக் பகுதியில் உள்ள குடியிருப்புகள், நதி கடந்து செல்லும் பாதைகளிலும் பிற இடங்களிலும் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது. இதற்கான ஒரு திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தயாரித்து கொடுக்க வேண்டும்.
நர்மதா நதியின் கரையில் புனித நகரங்கள், மத வழிபாட்டு தலங்கள் அருகில் அசைவ உணவுகள், மதுபானங்கள் விற்க தடை செய்யப்படும். திடக்கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
நதியின் பிறப்பிடத்தில் இருந்து வெகு தூரத்தில் செயற்கைக்கோள் நகரம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.