ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்
ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்
ADDED : ஜூலை 31, 2025 08:12 PM

புதுடில்லி: ஆகஸ்ட் மாதம் இயல்பு மழையும், செப்டம்பரில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையின் முதல் பாதியில் நாடு இயல்பை விட அதிகமான மழையைப் பெற்றது. ஹிமாச்சலப் பிரதேசம், திடீர் வெள்ளத்தை சந்தித்தது. பருவமழையின் 2வது பாதியிலும் (ஆகஸ்ட்,செப்டம்பர்) இயல்பைக்காட்டிலும் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவமழையின் இரண்டாம் பகுதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர் 2024) இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகலாம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்.
பருவமழையின் இரண்டாம் பாதியில் நாடு முழுவதும் இயல்பான மழைப்பொழிவை விட (நீண்ட கால சராசரியான 422.8 மி.மீ. இல் 106 சதவீதம்) அதிகமாக இருக்கும்.
இவ்வாறு மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.