எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட மாட்டேன்!: மைசூரு பொது கூட்டத்தில் சித்தராமையா ஆவேசம்
எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட மாட்டேன்!: மைசூரு பொது கூட்டத்தில் சித்தராமையா ஆவேசம்
ADDED : ஆக 10, 2024 06:20 AM

மைசூரு: ''எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட மாட்டேன். எனக்கு மைசூரில் வீடு இல்லை. கடனை அடைப்பதற்கு இரண்டு வீடுகளை விற்று விட்டேன். பூஜ்யத்தில் இருந்து அரசியலை ஆரம்பித்தவன் நான்,'' என முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரில் ஆவேசமாக பேசினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக, பா.ஜ., - ம.ஜ.த., எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
பா.ஜ., முறைகேடுகள்
முறைகேடுக்கு பொறுப்பேற்று சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து, மைசூரு வரை எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். பாதயாத்திரை செல்லும் நகரங்களில், ஒரு நாள் முன்னதாக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி, பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை விளக்கின.
எதிர்க்கட்சிகளின் பாதயாத்திரை, மைசூரில் இன்று நிறைவு பெறுகிறது. நகரின் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் இன்று எதிர்க்கட்சிகள் பொது கூட்டம் நடத்த உள்ள நிலையில், அதே மைதானத்தில், காங்கிரஸ் தரப்பில் நேற்று மக்கள் இயக்கம் என்ற பெயரில் நேற்று பொது கூட்டம் நடத்தப்பட்டது.
எங்கள் நிலம்
கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
என் மனைவிக்கு அவரது சகோதரர் வழங்கிய நிலத்தை, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஆக்கிரமித்து கொண்டது. இதையறிந்து, எங்கள் நிலத்தை வழங்கும்படி, 2014ல் என் மனைவி விண்ணப்பித்தார்.
அப்போது நான் முதல்வராக இருந்தும், சிபாரிசு செய்யவில்லை. ஆனால், முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது தான், எங்கள் நிலத்தில் 50 சதவீதம் அளவுக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இது எப்படி முறைகேடு ஆகும்.
பா.ஜ., - ம.ஜ.த., பாதயாத்திரை நடத்தினாலும், என்னை முதல்வர் பதவியில் இருந்து இறக்க முடியாது. அவர்களுக்கு நான் அடிபணிய மாட்டேன். மக்கள் ஆசிர்வாதம் என் மீது இருக்கும் வரை, என்னையும், எங்கள் அரசையும் அசைக்க முடியாது.
எனக்கு மைசூரில் சொந்த வீடு இல்லை. கடனை அடைப்பதற்கு இரண்டு வீடுகளை விற்று விட்டேன். பூஜ்யத்தில் இருந்து அரசியலை ஆரம்பித்தவன் நான். 1983ல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது, டிபாசிட் தொகை செலுத்த பணமில்லாமல், என் அலுவலக ஊழியர் 250 ரூபாய் கொடுத்தார்.
தகுதி இல்லை
மக்களே 63,000 ரூபாய் பணம் செலவழித்து, என்னை வெற்றி பெற செய்தனர். என்னுடைய ஒன்பது தேர்தல்களிலும் மக்கள் தான் செலவழித்தனர். அம்பேத்கர் காண்பித்த ஜனநாயக நடைமுறைப்படி, அரசியல் அமைப்பு பாதுகாப்புக்காக போராடி வருகிறோம். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், அதற்கும், எனக்கும் தொடர்பு இல்லை.
அதிகாரிகள் தான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சிறப்பு விசாரணை குழு விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், என்னை சிக்க வைப்பதற்கு முயற்சி நடக்கிறது.
முறைகேடு, முறைகேடு என்று எதிர்க்கட்சியினர் கூச்சல் இடுகின்றனர். என்னை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்துகின்றனர்.
என்னை கேட்பதற்கு, எடியூரப்பா, குமாரசாமி, அசோக், விஜயேந்திராவுக்கு தகுதி இல்லை. அவர்களின் சூழ்ச்சிக்கு பயப்பட மாட்டேன்.
விஜயேந்திரா தான் முறைகேட்டில் சிக்கி உள்ளார். எடியூரப்பா போன்று, காசோலை மூலம் நான் லஞ்சம் வாங்கவில்லை. அசோக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது.
நான் எந்த தவறும் செய்யவில்லை. எப்போதுமே விரோத அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை செய்வதை பார்த்து நான் சும்மா இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். விரைவில் அவர்கள் சிறைக்கு செல்வர். ராஜ்பவனை தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
...பாக்ஸ்...
சிவகுமார் சபதம்
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
குமாரசாமி, மற்றவர்களை வளர விட மாட்டார். தன் குடும்பத்தினரை வளர்ப்பதற்காக, மற்றவர்களை ஓட விட்டவர். குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., வெறும் 19 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த சிவகுமார் தலைமையில், 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த சிவகுமார் இருக்கும் வரை, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்க முடியாது.
ஆப்பரேஷன் தாமரை செய்து ஆட்சியை கலைக்கலாம் என்று நினைத்தால், அது முடியாது. நாங்கள் அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறோம்.
காங்கிரஸ் வாக்குறுதிகளை யாராலும் நீக்க முடியாது. முதல்வரின் மனைவி பார்வதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை, சாமுண்டீஸ்வரி தாயும் மன்னிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
-------
பாக்ஸ்..
போக்குவரத்து நெரிசல்
மைசூரு காங்கிரஸ் பொது கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஒட்டு மொத்த அமைச்சர்களும், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். தலைவர்களின் வாகனங்களால் நகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மெயின் பேனர் படங்கள்
10_KPCC Meeting
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான காங்கிரஸ் மக்கள் இயக்க பொது கூட்டத்தை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கொம்பு ஊதி துவக்கி வைத்தனர்.
10_Mysore Congress
பொது கூட்டத்தில் பங்கேற்றோரின் ஒரு பகுதியினர். இடம்: மஹாராஜா கல்லுாரி மைதானம், மைசூரு.
***

