கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை: திருப்பதி பயணத்தை ஒத்திவைத்தார் ஜெகன்மோகன்
கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை: திருப்பதி பயணத்தை ஒத்திவைத்தார் ஜெகன்மோகன்
UPDATED : செப் 27, 2024 10:35 PM
ADDED : செப் 27, 2024 05:54 PM

விஜயவாடா: '' எனது திருப்பதி பயணத்தை தடுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கிறார். இதனால், பயணத்தை ஒத்திவைத்துள்ளேன்,'' என ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி தலைவர் ஜெகன் மோகன் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலை தூய்மைபடுத்தும் பணி நடந்தது.
இந்நிலையில், சந்திரபாபுவின் பாவத்தை போக்க திருப்பதியில் பரிகார பூஜை நடத்தப்போவதாகவும், இதற்காக திருப்பதி செல்ல போவதாகவும் ஜெகன்மோகன் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, ஜெகன்மோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ., கட்சிகள், திருப்பதி வெங்கடாசலபதி மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் உள்ளது என்று உறுதிமொழி பத்திரம் தர வேண்டும் என வலியுறுத்தின.
இந்நிலையில் நிருபர்களிடம் ஜெகன்மோகன் கூறியதாவது: மாநிலத்தில் பேய் ஆட்சி நடக்கிறது. திருமலை கோவிலுக்கு நான் வருவதை அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கோவிலுக்கு செல்வது தொடர்பாக ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. இதனால், தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஒருபுறத்தில், நாங்கள் கோவிலுக்கு செல்வதை மாநில அரசு ஒருபுறம் தடுக்கிறது. மறுபுறம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.,வினர் ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது பா.ஜ., தலைமைக்கு தெரியுமா என தெரியவில்லை. அரசியல் நோக்கத்தில் இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில், லட்டு பிரசாத விவகாரத்தை சந்திரபாபு கொண்டு வந்துள்ளார். லட்டு பிரசாதம் குறித்து அவர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். எனது திருமலை பயணத்தை ஒத்தி வைக்கிறேன்.
எனது ஜாதி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். அதேநேரத்தில் மற்ற மதங்களை நான் மதிக்கிறேன். நான் மனிதநேய சமுதாயத்தை சேர்ந்தவன். முதல்வர் பதவிக்கு இணையான பதவி வகிக்கும் ஒருவர், கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிறகு தலித்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

