தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வன்முறையை காரணம் காட்டி தடியடி நடத்துவதை அனுமதிக்க முடியாது!. 'நீட்' போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வன்முறையை காரணம் காட்டி தடியடி நடத்துவதை அனுமதிக்க முடியாது!. 'நீட்' போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வன்முறையை காரணம் காட்டி தடியடி நடத்துவதை அனுமதிக்க முடியாது!. 'நீட்' போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

1


UPDATED : ஜூலை 27, 2026 09:59 PM

ADDED : ஜூலை 27, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 09:59 PM ADDED : ஜூலை 27, 2026 09:21 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-டில்லி சிறப்பு நிருபர்-

'நாட்டின் எந்தப் பகுதியில் போராட்டம் நடந்தாலும், அதை காரணம் காட்டி போலீசார் மிதமிஞ்சிய பலத்தை பயன்படுத்துவதையோ, தடியடி நடத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20ம் தேதி பார்லி.,யை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர்.

மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போராட்டம் நடந்த மறுநாளே, பிரதமர் இல்லத்தை காங்கிரஸ் தலைவர்கள் முற்றுகையிட முயன்றதால், இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகரமானது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பதற்றமான சூழல் உருவான நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.

இந்நிலையில், டில்லி ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுதும் 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது மிதமிஞ்சிய போலீசார் குவிக்கப்பட்டது, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே போல், போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நாட்டு மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது. ஒரு இடத்தில் போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே, போலீசார் மிதமிஞ்சி பலத்தை பயன்படுத்துவதையோ, தடியடி நடத்துவதையோ ஏற்க முடியாது.

அதே போல், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது. போராட்டங்களின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கவும், அதே வேளையில் போராட்ட உரிமையை பாதுகாக்கவும், நாடு முழுதும் சீரான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஜனநாயக செயல்முறைக்கு சுயகட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம். போலீசார் எல்லை மீறி செயல்பட்டிருந்தால், அது தொடர்பாக நடுநிலையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் சரி; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சரி; இருதரப்பினரின் உயிரும் முக்கியமானது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது, ஆஜரான வழக்கறிஞர் பவுசியா ஷக்கீல் என்பவர், ''பீஹாரில் போராட்டக்காரர்கள் மீது ஏ.கே.,47 ரக துப்பாக்கியை போலீசார் பிரயோகித்தனர்,'' என, குற்றஞ்சாட்டினார். மற்றொரு மூத்த வழக்கறிஞரான விகாஷ் சிங், மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு நடுநிலையான முறையில் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து இன்று விரிவாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

டில்லி உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக கடந்த 22ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசும், டில்லி போலீசாரும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், போராட்ட களத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், வீடியோ ஆதாரங்களை அழிக்காமல் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us