ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., வருத்தம்
ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., வருத்தம்
ADDED : பிப் 14, 2024 04:39 AM

பெங்களூரு : ''ஒரு சொட்டு தண்ணீர் கூட, எந்த வீட்டுக்கும் வரவில்லை. தண்ணீர் விநியோகம் செய்ய, குடிசை மேம்பாட்டு வாரியத்துக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது,'' என்று ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி வலியுறுத்தினார்.
கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
பா.ஜ., - ராமமூர்த்தி: ஜெயநகர் சட்டசபை தொகுதியில், 13 குடிசை வாழ் பகுதிகள் உள்ளனர். இவர்களுக்கு இன்றளவும் காவிரி நீர் கிடைக்கவில்லை.
துணை முதல்வர் சிவகுமார்: பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 2017 முதல், இதுவரை ஒவ்வொரு மாதமும் தலா 10 ஆயிரம் லீட்டர் இலவச நீர் விநியோகிக்கப்படுகிறது. ஜெயநகரின் குடிசை வாழ் பகுதிகளில் உள்ள 5,515 குடும்பங்களும் பயன் பெறுகின்றனர்.
அவர்களுக்காக, குடிசை மேம்பாட்டு வாரியம் சார்பில், ராகிகுட்டாவில் 250 பிளாட்கள், ஆர்.ஆர்.நகரில் 400 பிளாட்கள் உட்பட 2,900 பிளாட்கள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2013 முதல், 11 ஆண்டுகளாக இதுவரை காவிரி நீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. குறிப்பிட்ட கட்டணத்தை, குடிசை மேம்பாட்டு வாரியம் செலுத்தினால், தொந்திரவு ஏற்படாது.
ஆண்டுதோறும் பெங்களூரு மக்கள் தொகை 10 லட்சம் உயர்கிறது. இதனால், 6.5 டி.எம்.சி., காவிரி நீர் பெங்களூருக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று புது கணக்கு போடப்பட்டுள்ளது. இதில், 1.5 டி.எம்.சி., நீர் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்னை அதிகமாகிறது. பெங்களூரு மக்களுக்கு எந்த விதமான தொந்திரவு ஏற்படாத வகையில், குடிநீர் விநியோகிப்பது எங்கள் கடமை.
ராமமூர்த்தி: ஒரு சொட்டு தண்ணீர் கூட, எந்த வீட்டுக்கும் வரவில்லை. தண்ணீர் விநியோகம் செய்ய, குடிசை மேம்பாட்டு வாரியத்துக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.
துணை முதல்வர்: உங்கள் தொகுதி மேம்பாட்டுக்காக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்த பணத்தை கொண்டு, தண்ணீர் விநியோகிக்க செலுத்தி விடுங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: புத்திசாலித்தனமாக பதில் சொல்ல வேண்டாம். ராமமூர்த்தி புதிதாக எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். தொகுதி மேம்பாட்டுக்கு கொடுக்கும் நிதி வேறு. பெங்களூரு மாநகராட்சி மூலம் பணியாற்ற வையுங்கள்.
எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத்: பெங்களூரில் டேங்கர்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் கிடைக்கவில்லை. இப்படி செய்தால் எப்படி. துணை முதல்வர் சிவகுமார் செல்வாக்கு மிக்கவர். டேங்கர் லாபியை ஒடுக்க வேண்டும்.
துணை முதல்வர்: தண்ணீர் விஷயத்தில் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என்பதை, உங்கள் அக்கம், பக்கம் அமர்ந்திருக்கும் அசோக், சுரேஷ்குமாரை கேளுங்கள். டேங்கர்களில் விநியோகம் செய்வது, காவிரி நீர் அல்ல. அவர்கள் விநியோகம் செய்வது, ஆழ்துளை கிணறு நீர்.
இந்த அனைத்து தண்ணீர் பிரச்னைக்கும், மேகதாது திட்டம் மட்டுமே தீர்வு. மேகதாதில் அணை கட்டுவதற்காக, நாங்கள் பெரிய போராட்டமே செய்து வருகின்றோம். நீங்களும் ஆதரவு கொடுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

