பாலியல் வழக்கில் குற்றமற்றவர்: தேவ கவுடா பேரனுக்கு நிம்மதி
பாலியல் வழக்கில் குற்றமற்றவர்: தேவ கவுடா பேரனுக்கு நிம்மதி
ADDED : ஜூன் 27, 2025 01:17 AM

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேரன் மீதான பாலியல் வழக்கில், 'அவர் குற்றமற்றவர்' என, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடா. இவரது மூத்த மகன் ரேவண்ணாவின் இளைய மகன் சூரஜ் ரேவண்ணா, 37. ம.ஜ.த., கட்சியின் எம்.எல்.சி.,யாக இருக்கிறார்.
ஹாசன் மாவட்டத்தின், 'சூரஜ் ரேவண்ணா படை'யின் பொருளாளராக இருந்தவர் சேத்தன். இவர், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் கடந்தாண்டு அளித்த புகாரில், சூரஜ் ரேவண்ணா, தன்னை இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, சேத்தன் மீது சூரஜ் தரப்பும் புகார் அளித்தது. சேத்தன் அளித்த புகாரில், கடந்த ஆண்டு ஜூன் 23ல் கைது செய்யப்பட்ட சூரஜ், சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் வந்தார்.
இதற்கிடையில், மற்றொரு கட்சி தொண்டரும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தனக்கும் சூரஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் புகார் அளித்திருந்தார். இவ்விரு வழக்கு விசாரணையை, சி.ஐ.டி.,யிடம் அரசு ஒப்படைத்தது.
மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்தது.
விசாரணை நடத்திய சி.ஐ.டி., போலீசார், 'சூரஜ் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி, 'அவர் குற்றமற்றவர்' என்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இதனால் சூரஜ் ரேவண்ணாவும், தேவ கவுடா குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.