கூலி தரவில்லை; நீங்க தான் வாங்கி தரணும்: கொலைகாரன் புகாரால் சிக்கிய குற்றவாளி!
கூலி தரவில்லை; நீங்க தான் வாங்கி தரணும்: கொலைகாரன் புகாரால் சிக்கிய குற்றவாளி!
ADDED : நவ 10, 2024 09:01 AM

மீரட்: மனைவியை கொலை செய்ய பேசிய பணத்தை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தரவில்லை. அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி குற்றவாளி போலீசில் புகார் அளித்த சம்பவம் உ.பி.,யின் மீரட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர் அஞ்சலி. வழக்கறிஞர். கடந்த ஓராண்டிற்கு முன்பு வீடருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாத காரணத்தினால், விடுவித்தனர். சில நாட்களுக்கு பிறகு, முக்கிய குற்றவாளியான நீரஜ் சர்மா மற்றும் யஷ்பால் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் நீரஜ் சர்மா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சுரேஷ் பட்டி என்பவர் கூறியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சமீபத்தில் நீரஜ் சர்மா ஜாமினில் வெளியே வந்தான். இந்நிலையில், அவன் போலீசில் அளித்த புகார் மூலம் இக்கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து அம்பலமானது.
புகாரில் நீரஜ் சர்மா கூறியதாவது: சொத்து பிரச்னை காரணமாக கணவர் நிகில் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து அஞ்சலியை கொலை செய்ய திட்டமிட்டனர். கடை ஒன்றில் என்னை சந்தித்த அஞ்சலியின் மாமியார் சர்லா குப்தா, மாமனார் பவன் குப்தா ஆகியோர், அஞ்சலி எங்களுக்கு தொல்லை கொடுக்கிறார். சொத்துகள் அனைத்தையும் அவரதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், எங்களுக்கு எதிராக பல புகார்களை கொடுக்கிறார். அவரை கொலை செய்ய வேண்டும். இதற்காக ரூ. 20 லட்சம் பணம் மற்றும் ஐந்து கடைகளை எழுதி தருவதாக கூறினர். அஞ்சலி எப்போது எல்லாம் வெளியே வருவார் என்பதை நில் குப்தா என்னிடம் தெரிவித்தார். பல ஆண்டுகளாக அவர்கள் அஞ்சலியை கொடுமைபடுத்தி உள்ளனர்.
போலீசாரும் எங்களை கைது செய்தனர். பணம் தருவதாக கூறியதால் அவர்கள் மீது புகார் அளிக்கவில்லை. சிறையில் இருந்ததால் அவர்கள் சொன்ன பணத்தை பெற முடியவில்லை. தற்போது கேட்டால் பணத்தை தர மறுக்கிறார்கள். அவர்ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தவறை உணர்ந்து இந்த புகாரை அளிக்கிறேன் எனக்கூறியுள்ளார். மேலும் வழக்கு தொடர்பான பல ஆதாரங்களையும் நீரஜ் சர்மா போலீசாரிடம் கொடுத்துள்ளான். இதனை வைத்து இந்த வழக்கை போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.