டிவி பார்க்கக் கூடாது என்பது சித்ரவதை கிடையாது; மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
டிவி பார்க்கக் கூடாது என்பது சித்ரவதை கிடையாது; மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : நவ 09, 2024 03:31 PM

மும்பை: டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக் கூடாது என்பது எல்லாம் சித்ரவதையின் கீழ் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு திருமணமான பெண் ஒருவர், தன் கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, 2003ம் ஆண்டு தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர், கணவர் மற்றும் அவரது தாய், தந்தையர் மீது போலீஸில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில் டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதையடுத்து, 498ஏ மற்றும் 306 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கணவன் மற்றும் அவரது பெற்றோரை குற்றவாளிகளாக கீழமை நீதிமன்றம் அறிவித்தது.
இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிவி பார்க்கக் கூடாது, அண்டை வீட்டாருடன் பேசக்கூடாது , கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது என்று கூறுவதும், நள்ளிரவில் வரும் தண்ணீரை பிடிக்கச் சொல்வதும் குற்றமாகாது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், நள்ளிரவு 1.30 மணியளவில் தான் அவர் வசிக்கும் கிராமத்தில் தண்ணீர் வருவதாகவும், அதனை அந்த கிராம மக்களே பிடிக்கும் போது, அது கொடுமையின் கீழ் வராது என்றும் நீதிபதிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.