ADDED : செப் 21, 2024 07:03 AM

கலபுரகி: ''பாலஸ்தீன கொடியை கையில் பிடிப்பதில் தவறு இல்லை,'' என, அமைச்சர் ஜமிர் அகமது கான் கூறியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோலார், சிக்கமகளூரு, தாவணகெரேயில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக, ஒரு சமூகத்தினர் பாலஸ்தீன நாட்டின் கொடியை கையில் பிடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான், கலபுரகியில் அளித்த பேட்டி:
பாலஸ்தீனத்திற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. நமது அரசு ஆதரித்து இருப்பதால் அந்த நாட்டுக் கொடியை பிடித்து ஊர்வலம் செல்கின்றனர். இதில் தவறு இல்லை. வேறு நாட்டிற்கு ஆதரவாக முழக்கமிட்டால், அது தேச துரோகம். அப்படி செய்வோரை துாக்கிலிட வேண்டும். பாலஸ்தீன கொடி பிடித்து செல்பவர்களால், பா.ஜ., தலைவர்களுக்கு என்ன பிரச்னை?
மாண்டியா நாகமங்களாவில் பல ஆண்டுகளாக, கேரளாவை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அங்கு நடந்த கலவரத்தில், கேரளாவை சேர்ந்தவர்கள் மீது, பா.ஜ., தலைவர்கள் தேவை இன்றி பழிபோடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜமீர் அகமது கான் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.