ADDED : நவ 19, 2024 06:41 AM

தங்கவயல்: ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவகாரத்தில், அவர்களை அனுப்பிய தனியார் நிறுவனங்களுக்கு பெமல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2,500 பேர், 14வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வந்த ஜெமினி செக்யூரிட்டி அண்ட் அலைட் சர்வீஸ்; ஆர்.சி., பிசினஸ் சொல்யூஷன்; சன் சைன் அண்ட் அலைட் சர்வீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு பெமல் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
'நவம்பர் 5ம் தேதி முதல், நீங்கள் பணிக்கு ஆட்களை வழங்கவில்லை.
இதனால் பணிகள் முடிக்கப்படவில்லை. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
'இதற்காக ஒப்பந்தப்படி அபராதம் செலுத்த வேண்டும். பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், ஒப்பந்தப்படி புதிய பணியாளர்களை அமர்த்த வேண்டி உள்ளது' என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.