முதல்வர் தொகுதியில் குடிசைகளை இடிக்க நோட்டீஸ்: ஆம் ஆத்மி
முதல்வர் தொகுதியில் குடிசைகளை இடிக்க நோட்டீஸ்: ஆம் ஆத்மி
ADDED : ஜூலை 25, 2025 10:19 PM

புதுடில்லி:“ஷாலிமர் பாக் மற்றும் ஷாஹ்தராவில் உள்ள குடிசை வீடுகளை இடிக்க, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. டில்லியை ஆளும் பா.ஜ., அரசு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது,”என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பா.ஜ., தலைமையிலான டில்லி அரசு, ஏழைகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஜஹான் ஜுக்கி; வஹின் மகான்' என வாக்குறுதியளிக்கும் அட்டைகளை பா.ஜ., வினியோகித்தது.
மாற்று வீடு வழங்காமல் ஒரு குடிசை கூட இடிக்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ., ஆறு மாதங்களுக்குள்ளேயே டில்லி மாநகர் முழுதும் குடிசைகளை இடித்து தள்ளி, ஏழைகளை ரோட்டுக்கு அனுப்பி வருகிறது.
ஏற்கனவே, பல பகுதிகளில் குடிசைகளை இடித்த பா.ஜ., அரசு இப்போது, முதல்வர் ரேகா குப்தாவின் தொகுதியான ஷாலிமர் பாக் மற்றும் ஷாஹ்தாரா குடிசைவாசிகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கிஉள்ளது.
ஷாலிமர் பாக் இந்திரா முகாம் மற்றும் ஷாஹ்தாரா லால்பாக் ஆகிய இடங்களில், 1990ம் ஆண்டு முதல் குடிசைகளில் வசித்து வருகின்றனர். ஆனால்,- 15 நாட்களுக்குள் குடிசைகளை காலி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். லால்பாகில் உள்ள குடிசைகள் வரும், 31ம் தேதி இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த, 35 ஆண்டுகளாக எந்த அரசும் இந்த குடிசைவாசிகளை தொந்தரவு செய்யவில்லை. ஆனால், பா.ஜ., அரசு குடிசைகளை இடித்துத் தள்ள புல்டோசருடன் தயாராக உள்ளது.
ஏழைகளின் சக்தியை பா.ஜ., குறைத்து மதிப் பிடக்கூடாது.
ஏழைகள்தான் டில்லி மாநகரில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கை ஆம் ஆத்மி முழு பலத்துடன் எதிர்க்கிறது.
ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், மாற்று வீடு வழங்காமல் ஒரு குடிசையைக் கூட காலி செய்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

