ADDED : பிப் 29, 2024 06:10 AM
பெங்களூரு : பெங்களூரின் ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, பிப்ரவரி 18ல் விவசாயி ஒருவர் வந்தார். அழுக்கான உடை அணிந்திருந்ததால், அவரை பாதுகாப்பு ஊழியர் அனுமதிக்கவில்லை. சக பயணியர் வலியுறுத்தியும் அவர் பொருட்படுத்தவில்லை.
இச்சம்பவத்தை கார்த்திக் ஐரானி என்பவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை பார்த்த, பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியரை பணி இடைநீக்கம் செய்தனர்.
விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த, தேசிய மனித உரிமைகள் ஆணையம், கர்நாடக தலைமை செயலர், பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
'ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை என்றால், மனித உரிமைமீறலாகும். ஒரு நபர் அணிந்துள்ள உடையை வைத்து, பொதுபோக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கக் கூடாது.
அபாய பொருட்களை கொண்டு வந்தால் தடுக்கலாம். நடந்த சம்பவம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை அளிக்க வேண்டும்' என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
