இனி எல்லாமே ஈஸி தான்; ஐயப்ப பக்தர்களுக்காக வந்தாச்சு 'சுவாமி சாட்பாட்'!
இனி எல்லாமே ஈஸி தான்; ஐயப்ப பக்தர்களுக்காக வந்தாச்சு 'சுவாமி சாட்பாட்'!
ADDED : நவ 13, 2024 08:31 PM

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட 'சுவாமி ஏ.ஐ. சாட்பாட்'டை (Swamy AI chatbot) கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் சபரிமலை ஐயப்பனுக்கு உகந்ததாகும். இந்த மாதங்களில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வருவது வழக்கம். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளை பக்தர்கள் சந்திக்கின்றனர்.
எனவே, பக்தர்களின் வசதிக்காக சபரிமலை கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வரும் 15ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களின் சீசன் தொடங்க உள்ள நிலையில், ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட 'சுவாமி சாட்பாட்'டை (Swamy chatbot) கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பக்தர்கள் தங்களின் ஸ்போர்ட்களின் மூலமாக, பூஜை நேரம், ரயில், விமான சேவை நேரம் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும். இதன்மூலம், எளிதான, பாதுகாப்பான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த ஏ.ஐ., சாட் பாட்டானது, மலையாளம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
'இந்த முறையினால், இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பயணம், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்,' என்று கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.