அணு ஆயுத மிரட்டல் என்பது வழக்கமான வாய்ச்சவடால்: பாக்., தளபதி உளறலுக்கு இந்தியா பதிலடி
அணு ஆயுத மிரட்டல் என்பது வழக்கமான வாய்ச்சவடால்: பாக்., தளபதி உளறலுக்கு இந்தியா பதிலடி
UPDATED : ஆக 11, 2025 05:22 PM
ADDED : ஆக 11, 2025 05:20 PM

புதுடில்லி: 'அணுஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான வாய்ச்சவடால்தான்; அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என்று, பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பாக். ராணுவ தளபதி ஆசிம் முனீர், டம்பாவில் சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது, பேசிய அவர், இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், உலகின் பாதியை அழித்துவிடுவோம் என்றார். மேலும், சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம் என்றும் கொக்கரித்தார்.
ஆசிம் முனீரின் பேச்சு உலக நாடுகள் இடையே கவனம் பெற்ற நிலையில், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றும் கூறி உள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
அமெரிக்கா சென்றிருந்த போது பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியதாக கூறப்படும் கருத்துகள் எங்கள் கவனத்திற்கு வந்தது. அணு ஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான வாய்ச்சவடால் தான்.
பாக். வெளியிட்டுள்ள கருத்துகளில் உள்ள பொறுப்பற்ற தன்மை குறித்து சர்வதேச சமூகம் அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க முடியும். பயங்கரவாத இயக்கங்களுடன் கைகோர்த்துள்ள ஒரு நாட்டில், அணு ஆயுத கட்டுப்பாடு மீதான சந்தேகங்கள் இதன்மூலம் மேலும் வலுப்படுகிறது.
இந்த கருத்துகள் அனைத்தும் நட்புரீதியான 3வது நாட்டின் மண்ணில் இருந்து கூறப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.
அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம்.
இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.