பூஜ்யத்துடன் இணைந்து பூஜ்யமான கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
பூஜ்யத்துடன் இணைந்து பூஜ்யமான கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
ADDED : மார் 13, 2024 12:48 AM

புதுடில்லி:''பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால், பூஜ்யமாகத்தான் இருக்கும்.'' என, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
டில்லி கிராமோதயா அபியான் திட்டத்தின் கீழ், 41 கிராமங்களில் குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு வினியோகம் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 178 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2014 மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் டில்லியின் ஏழு தொகுதிகளையும் பா.ஜ., வென்றது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு ஒரு தொகுதியைக் கூட மக்கள் தரவில்லை. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம்.
ஆனால், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்.
பூஜ்யம் மற்றொரு பூஜ்யத்துடன் கூட்டணி அமைத்தால் பூஜ்யம்தான் கிடைக்கும். டில்லி, குஜராத் மற்றும் ஹரியானாவில் ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சியை மக்கள் துாக்கி எறிந்தனர். ஆனால், ஊழலை எதிர்ப்பதாக கூறும், ஆம் ஆத்மி, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலில் இரண்டு வகையான தலைவர்கள் உள்ளனர். ஒருவர் சொல்வதை செய்பவர். மற்றவர், சொல்லுக்கு எதிராக செயல்படுபவர்.
இந்த இருவருமே டில்லியில் உள்ளனர். ஒருவர் நரேந்திர மோடி, மற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். சொன்ன எதையும் கெஜ்ரிவால் இதுவரை செய்யவில்லை. ஊழல் கறைபடிந்த காங்கிரஸின் மடியில் ஆம் ஆத்மி அமர்ந்துள்ளது. அதன் ஊழலுக்கு ஒத்துப்போனால், தொடர்ந்து கூட்டணி அமைக்கலாம்.
அரசியலுக்கு வர மாட்டேன், முதல்வர் பதவி ஏற்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே மூன்று முறை முதல்வர் ஆகி விட்டீர்கள்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் புதிய கலாசாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். நாடு முழுதும் 13 கோடி பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி வீடுகளுக்கு குழாய் வாயிலாக எரிவாயு, 14 கோடி வீடுகளுக்கு குழாய் வாயிலாக குடிநீர், 14 கோடி வீடுகளுக்கு கழிப்பறைகள், 3 கோடி குடும்பங்களுக்கு ஐந்து கிலோ இலவச உணவு தானியங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்ற மோடி கடுமையாக உழைத்து அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
முத்தலாக் ஒழிப்பு, குடியுரிமைச் சட்டம் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் புதிய வைராக்கியம், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தின் சூழலை மோடி உருவாக்கியுள்ளார். வரும் 2047க்குள் நம்நாடு தன்னிறைவு அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் புரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

