காங்., - எம்.எல்.ஏ., மீது அமைச்சரிடம் நர்ஸ் புகார்
காங்., - எம்.எல்.ஏ., மீது அமைச்சரிடம் நர்ஸ் புகார்
ADDED : ஜன 07, 2024 02:48 AM

ஹுப்பள்ளி : வேண்டும் என்றே தன்னை பணியிட மாற்றம் செய்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., குறித்து சுகாதார அமைச்சரிடம், நர்ஸ் புகார் அளித்தார்.
ஹுப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தவர் சுனிதா. மூன்று மாதங்களுக்கு முன்பு, கதக் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று ஹுப்பள்ளி சென்றிருந்தார்.
கொரோனா பரவலை தடுப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்ததும், அங்கு வந்த சுனிதா, அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம், “ஹுப்பள்ளி - தார்வாட் கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பய்யா பிரசாத் வேண்டும் என்றே, என்னை பணியிட மாற்றம் செய்துள்ளார்.
''எனக்கு கடந்த மூன்று மாதங்களாக, சம்பளம் வரவில்லை. இதற்கு காரணம் கேட்டாலும், யாரும் சொல்வது இல்லை,” என, புகார் கூறினார்.
ஆனால் நர்ஸ் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். நர்ஸ் கூறிய குற்றச்சாட்டை, கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து உள்ளது.