ADDED : பிப் 06, 2025 11:07 PM
ஹாவேரி: ஹாவேரி மாவட்டம், ஹானகல் தாலுகாவின், ஆடூரு கிராமத்தை சேர்ந்தவர் குருகிஷண் அன்னப்பா ஹொசமனி, 7. இவர் ஜனவரி 14ம் தேதி விளையாடும் போது, கன்னத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது.
பெற்றோர் உடனடியாக, ஆடூரு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்த நர்ஸ் ஜோதி, சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதில், ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும், 'பெவி க்விக்' தடவி, பிளாஸ்டர் ஒட்டினார்.
மகனுக்கு பெவி க்விக் தடவியதை, மொபைல் போனில் பதிவு செய்து கொண்ட பெற்றோர், சுகாதார துறையிடம் புகார் அளித்தனர். அதிகாரிகள், அவரை இடமாறுதல் செய்தனர்.
'நர்ஸ் ஜோதி, மூன்று தையல் போடும் அளவுக்கு இருந்த சிறுவனின் காயத்துக்கு, சரியான சிகிச்சை அளிக்காமல் பெவி க்விக் போட்டு, கடமை தவறியுள்ளார்.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், வெறும் இடமாற்றம் செய்திருப்பது சரியல்ல' என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விஷயம் ஊடகங்களிலும் வெளியானது. அதன்பின் விழித்து கொண்ட சுகாதார அதிகாரிகள், அவசர ஆலோசனை நடத்தி நர்ஸ் ஜோதியை சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டனர்.
மேலும், சிறுவன் குருகிஷண் உடல்நிலையை டாக்டர்கள் ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பக்கவிளைவு எதுவும் ஏற்படவில்லை.

