ADDED : டிச 24, 2024 06:35 AM

கோவில்களுக்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தங்கம், வெள்ளி, வைரம் போன்றவை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கற்களை காணிக்கையாக அளிக்கும், வினோதமான வழிபாடு கொண்ட கோவில் மாண்டியாவில் உள்ளது.
மாண்டியா தாலுகாவில் உள்ள கிரகந்துார் பெவினஹள்ளி சாலையில் அமைந்துள்ளது, 'கோடிகல்லின காடு பசப்பா சிவன் கோவில்'. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த கோவில் உள்ளது.
கோவில் என்றவுடன் பிரமாண்டமான கட்டடங்கள், கோபுரங்கள் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த கோவிலுக்கு அவை எதுவும் இல்லை. ஏன், பூஜாரி கூட கிடையாது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், தாங்களாகவே பூஜை செய்து கொள்ளும் சிறப்பும் இருக்கிறது.
கல்லால் செய்யப்பட்ட ஒரே ஒரு சிவலிங்கம் மட்டும் காட்சி அளிக்கிறது. கோவிலை சுற்றி ஏராளமான கற்குவியல்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலுக்கு ஆரம்ப காலத்தில் உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமே வந்து வழிபட்டு உள்ளனர்.
சொந்த வீடு கட்ட விரும்புவோர், இந்த கோவிலில் வேண்டுதல் வைக்கின்றனர். அவர்கள் வீடு கட்டி முடிந்தவுடன், வீடு கட்டிய நிலத்தில் இருந்து மூன்று அல்லது ஐந்து கற்களை காணிக்கையாக எடுத்து வந்து செலுத்துகின்றனர்.
பெரும்பாலானோர் வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், இந்த கோவிலின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவியது.
தற்போது, பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
காணிக்கையாக செலுத்தும் கற்களுக்கு அளவு, வகை என எதுவுமில்லை.
இந்த சக்தி வாய்ந்த கோவிலுக்கு சென்று, உங்கள் வீடு கட்டும் கனவை நனவாக்குங்கள்.