பெங்களூரில் சட்டவிரோத கட்டடங்கள் அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தாமதம்
பெங்களூரில் சட்டவிரோத கட்டடங்கள் அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தாமதம்
ADDED : நவ 08, 2024 07:39 AM
பெங்களூரு: பெங்களூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதில் மாதகராட்சி அதிகாரிகள் தாமதம் காட்டுகின்றனர். அரசியல் நெருக்கடியே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
பெங்களூரின், பாபுசாப்பாளையாவில் அக்டோபர் 24ம் தேதி, புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பெங்களூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர்.
இதன்படி, வரைபட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை, அடையாளம் கண்டு அறிக்கை அளிக்கும்படி, தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், அனைத்து மண்டல கமிஷனர்களுக்கும் உத்தரவிட்டார்.
ஆனால், யாரும் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்வதில், பொறியாளர்கள் தாமதம் காட்டுகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விதிமீறலாக கட்டப்பட்ட மற்றும் கட்டப்படும் கட்டடங்களை பற்றிய தகவல், உதவி பொறியாளர், செயல் நிர்வாக பொறியாளர்கள், நகர திட்ட இணை இயக்குனரிடம் இருக்கும். ஆனால் இவர்கள், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்துவிட்டு மவுனமாகி விடுகின்றனர். சட்டவிரோத கட்டடங்கள் மீது, நடவடிக்கை எடுப்பது இல்லை.
ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டும், சட்டவிரோத கட்டடங்களை இடிப்பதாக கூறுகின்றனர். சட்டவிரோத கட்டடங்கள் குறித்து, அறிக்கை தயாரிக்காமல் இருப்பதில் அரசியல் நெருக்கடியும் முக்கியமான காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.