முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் முதலைகள் ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி
முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் முதலைகள் ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி
UPDATED : ஜன 11, 2025 01:34 AM
ADDED : ஜன 11, 2025 12:18 AM

போபால்: மத்திய பிரதேசத்தில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டிற்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள், அங்கு மூன்று முதலைகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் தொழிலதிபராக உள்ளவர் ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். பா.ஜ., நிர்வாகியான இவர், 2013 - 18 வரைஎம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார்.
சோதனை
தன் நண்பரும், முன்னாள் கவுன்சிலருமான ராஜேஷ் கேஷர்வானி உடன் சேர்ந்து, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ஹர்வன்ஷ் சிங் செய்து வருகிறார்.
இருவரும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஹர்வன்ஷ் மற்றும் ராஜேஷுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இருவருக்கும் சொந்தமான இடங்களில் நடந்த சோதனை, நேற்று நிறைவடைந்தது. விசாரணையில், ஹர்வன்ஷ் 155 கோடி ரூபாயும், ராஜேஷ் 140 கோடி ரூபாயும் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹர்வன்ஷ் சிங் வீட்டில் நடந்த சோதனையின் முடிவில், 3 கோடி ரூபாய் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 19 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.
அவர் வீட்டு தோட்டத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு சிறிய குளத்தில், மூன்று முதலைகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சட்டவிரோதமாக முதலைகள் வளர்ப்பது தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
அவர்கள் வந்து முதலைகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். பினாமி பெயரில் வாங்கி, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெளிநாட்டு கார்களை ராஜேஷ் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணை
அவர் வீட்டில் உள்ளவர்கள் பெயரில் கார்கள் பதிவு செய்யப்படாததால், இதுகுறித்து போக்குவரத்து துறையிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவர் வீட்டிலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டன.