வாகனங்களுக்கு எரிபொருள் நிதி வழங்காததால் அதிகாரிகள் அவதி
வாகனங்களுக்கு எரிபொருள் நிதி வழங்காததால் அதிகாரிகள் அவதி
ADDED : ஜன 29, 2024 10:59 PM
பெங்களூரு: கர்நாடக அரசின் கருவூலத்துக்கு மிக அதிகமான வருவாய் கொண்டு வரும் கலால் துறை வாகனங்களுக்கு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் கருவூலத்தை நிரப்புவதில், கலால்துறைக்கு முக்கிய பங்குள்ளது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கொண்டு வருகிறது. இத்தகைய துறையின் வாகனங்களுக்கு, எரிபொருள் நிரப்ப நிதி வழங்கப்படாததால் அதிகாரிகள், ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.
கலால்துறை அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு பொலிரோ, டாடா, மாருதி சியாஜ் கார் உட்பட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. சில மாவட்டங்களின் வாகன எரிபொருளுக்கான நிதி வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு தங்கள் சொந்த பணத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, அரசிடம் பில் கொடுத்து அதிகாரிகள், ஊழியர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றனர்.
ஆனால் அரசு நிதி வழங்குவது இல்லை. பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல், டீசலை அவ்வப்போது கடனுக்கு கிடைப்பதில்லை. இதனால் ஆங்காங்கே சோதனையிடுவது உட்பட, அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் அதிகாரிகள், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எரிபொருள் பற்றாக்குறையால் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளனர்.
எரிபொருளுக்கு மட்டுமின்றி, அன்றாட அலுவலக நிர்வகிப்புப் பணிகளுக்கும் பணமில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் பணமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையில் பழைய வாகனங்களை, பழைய இரும்பு பொருட்கள் கடைக்கு தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த, மோட்டார் வாகன சட்டப்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வாகனங்களை பழைய இரும்பு பொருட்கள் கடைக்கு அனுப்ப வேண்டும். இத்தகைய வாகனங்களுக்கு, போக்குவரத்துத்துறை தர சான்றிதழும் அளிப்பதில்லை.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்கள், கலால்துறையிலும் உள்ளன. இந்த வாகனங்களை அனுப்பிவிட்டால், அன்றாட பணிகளுக்கு என்ன செய்வது என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.