மஞ்சள் மெட்ரோ பாதையில் போக்குவரத்து ரயில் பெட்டிகளுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
மஞ்சள் மெட்ரோ பாதையில் போக்குவரத்து ரயில் பெட்டிகளுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
ADDED : டிச 23, 2024 07:06 AM

பெங்களூரு: நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் வர்த்தக போக்குவரத்தைத் துவக்க, ரயில் பெட்டிகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இரண்டாம் கட்டமாக, ரயில் பெட்டிகள் ஜனவரி 15ம் தேதி, ஹெப்பகோடி பணிமனையை வந்தடையும்.
இதுதொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில், ஓட்டுனர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும். ரயில் பெட்டிகளை வினியோகிக்கும் ஒப்பந்தத்தை, சீனாவின் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் நிறுவனம் பெற்றுள்ளது.
எப்போதோ பெட்டிகள் வந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவியதால் பெட்டிகள் வருவது தாமதமானது.
அதன்பின் கோல்கட்டாவின், டீடாகடா ரயில்வே சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்திடம், சீனா நிறுவனம் உள் ஒப்பந்தம் அளித்தது. தற்போது டீடாகடாவில் ரயில் பெட்டிகள் தயாராகின்றன. பொம்மசந்திரா - ஆர்.வி., சாலை இடையிலான மெட்ரோ மஞ்சள் பாதையில், ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
பொம்மசந்திரா, ஹெப்பகோடி, ஹுஸ்கூர், இன்போசிஸ் பவுன்டேஷன், எலக்ட்ரானிக் சிட்டி, ஹொசா ரோடு, சிங்கசந்திரா, கூட்லுகேட், ஹொங்க சந்திரா, பொம்மனஹள்ளி, சென்ட்ரல் சில்க் போர்டு, பி.டி.எம்., லே - அவுட், ஜெயதேவா மருத்துவமனை, ராகிகுட்டா, ஆர்.வி., சாலை ரயில் நிலையங்கள் உள்ள பாதையில், பிப்ரவரியில் வர்த்தக போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது.
இந்த பாதைக்கு முதற்கட்டமாக ஆறு ரயில் பெட்டிகள், எட்டு மாதங்களுக்கு முன்பே வந்தன.
இந்த பெட்டிகளை வைத்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஜனவரி 15ம் தேதி இரண்டாம் கட்ட ரயில் பெட்டிகள், ஹெப்பகோடி பணிமனையை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.