ADDED : நவ 04, 2024 11:39 PM

திருவனந்தபுரம், கேரளாவில், ஹிந்து மதத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒன்றிணைத்து துவங்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழு விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், வாட்ஸாப் செயலி பயன்பாட்டுக்கான தன், 'மொபைல் போன்' எண்ணை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகவும், அந்த எண்ணில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சேர்த்து, 'ஹிந்து கம்யூனிட்டி குரூப்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபரம் தெரியவந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் தெரிவித்துஉள்ளார். மேலும், அந்த எண்ணில் இருந்து மல்லு ஹிந்து ஆபீசர்ஸ், 'மல்லு முஸ்லிம் ஆபீசர்ஸ்' என்ற பெயரிலும் குழுக்கள் துவங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவி கூறியதாவது:
இது மிகவும் தீவிரமான பிரச்னை. அதிகாரிகள் மத்தியில் மத ரீதியிலான பிரிவினைகள் ஏற்படுவது ஆபத்தானது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.