ADDED : மே 25, 2025 02:26 AM

கொச்சி: ஆப்ரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா 3 என்ற சரக்கு கப்பல், அரபிக்கடல் வழியாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. 600 அடி நீளமுள்ள இந்த கப்பலில் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த 24 பணியாளர்கள் இருந்தனர்.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, நேற்று பிற்பகல் கொச்சி துறைமுகத்துக்கு இந்த கப்பல் புறப்பட்டது. கொச்சியிலிருந்து 70 கி.மீ., துாரத்தில் நடுக்கடலில் திடீரென கப்பல் கவிழ்ந்தது. இதுகுறித்து கப்பல் நிர்வாகம் சார்பில், நம் கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த பணியாளர்களில் ஒன்பது பேர் படகுகளை பயன்படுத்தி வெளியேறினர்.
அவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படையினர், மீதமுள்ள 15 பேரை காப்பாற்றுவதற்காக லைப்ரேப்ட் எனப்படும் உயிர்காக்கும் கலன்களை டிரோனியர் விமானம் வாயிலாக கப்பலைச் சுற்றி இறக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் கப்பலில் இருந்து 3.6 லட்சம் கிலோ சல்பர் எரிவாயு எண்ணெய் மற்றும் 85,000 கிலோ கப்பல் இயந்திரங்களுக்கான எண்ணெய் ஆகியவை கடலில் கொட்டியுள்ளன.
இதனால் கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், கடலோர பொது மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.