ADDED : பிப் 22, 2024 11:11 PM
பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் உள்ள 11 தொகுதிகளில், ஏழு தொகுதிக்கு ஒக்கலிகர் சமூகத்தினரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்' என்று, துணை முதல்வர் சிவகுமாருக்கு, ஒக்கலிகர் சமூகம் கோரிக்கை வைத்துள்ளது.
ம.ஜ.த.,வின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பழைய மைசூரில், கடந்த சட்டசபை தேர்தலின் போது பெரும்பாலான தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பழைய மைசூரில் வேட்பாளர்களின், வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வைக்கின்றன. துணை முதல்வர் சிவகுமார் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, முதல்வர் பதவியை எதிர்பார்த்து இருந்த சிவகுமார், ஒக்கலிகர் சமூகத்திற்கு முதல்வர் பதவி தேடி வரும் வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். இதனால் அவர் முதல்வராகி விடுவார் என்று ஒக்கலிகர் சமூகத்தினர், காங்கிரசை ஆதரித்தனர். ஆனால் சிவகுமாரால் முதல்வராக முடியவில்லை; துணை முதல்வர் பதவியே கிடைத்தது.
இந்நிலையில் பெங்களூரில் சிவகுமாரை, பழைய மைசூரு ஒக்கலிகர் சமூக தலைவர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'நீங்கள் முதல்வர் ஆவீர்கள்' என்ற நம்பிக்கையில், காங்கிரசை முழுமையாக ஆதரித்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களால் முதல்வராக முடியவில்லை.
ஆனாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வரும் லோக்சபா தேர்தலில், பழைய மைசூரில் உள்ள 11 தொகுதிகளில் நமது சமூகத்திற்கு ஏழு தொகுதிகளை, ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.