இப்போ விழுமோ... எப்போ விழுமோ...: மும்பையில் ஆபத்தான கட்டடங்களில் வசிக்கும் மக்கள்: காரணம் என்ன?
இப்போ விழுமோ... எப்போ விழுமோ...: மும்பையில் ஆபத்தான கட்டடங்களில் வசிக்கும் மக்கள்: காரணம் என்ன?
ADDED : ஆக 29, 2024 04:50 PM

மும்பை: இந்தியாவின் நிதித் தலைநகராக விளங்கும் மும்பையில் விண்ணை முட்டும் அளவுக்கு வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. இதனால், ஆபத்தான வகையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களில், மக்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து வசித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பை, இந்தியாவின் நிதித் தலைநகரமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு மிக்க இந்நகரில் பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பல பிரபலங்கள் இங்கு வசித்து வருகின்றனர். நெடுஞ்சாலைகள், மெட்ரோ பாதைகள் மற்றும் பாலங்கள் என அதன் உட்கட்டமைப்பு வலுவாக உள்ளது. அந்நகரம் முழுவதும் பல மாடி கட்டடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளால் நிறைந்து காணப்படுகின்றன. அந்நகரின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக வீட்டு வாடகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
ரூ.40 ஆயிரம் வாடகை
இந்தியாவிலேயே அதிக வாடகை கொண்ட நகரமாக மும்பை திகழ்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறை கொண்ட வீட்டிற்கு வாடகையாக ரூ.40 ஆயிரம் ஆக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் வசிக்கும் பலருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அந்நகரில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் மிகப்பழமையான கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இது இடிந்து விழும் நிலையில் உள்ளது. பருவமழையின் போது சில கட்டடங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இப்படிப்பட்ட கட்டடங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியே செல்ல மறுப்பதற்கு முக்கிய காரணம் வீட்டு வாடகை.
கிராண்ட் சாலை பகுதியில் உள்ள மிகப்பழமையான கட்டடம் ஒன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. அப்போதே, இந்த கட்டடம் யாரும் வாழத் தகுதியற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கிருந்த மக்கள் உடனடியாக காலி செய்யும்படி அரசு உத்தரவிட்டும் யாரும் காலி செய்யவில்லை. மழைக்காலத்தில் இக்கட்டடம் சரிந்தது. அதில் நடந்து சென்றவர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் 13 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புத்துறையினர் மிக நீண்ட நேரம் போராடி அவர்களை மீட்டனர்.
ஆபத்தான கட்டடங்கள்
2 கோடி பேர் வசிக்கும் இந்நகரில், இது போன்று பல கட்டடங்கள் உள்ளன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் , விழாமல் இருக்க அதனை தொடர்ச்சியாக பழுது பார்க்க வேண்டும் என மாநில வீட்டுவசதி வாரியத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 850 கட்டடங்கள் மிக ஆபத்தானவை . அங்கு பராமரிப்பு செய்யவே முடியாத நிலையிலும் உள்ளது.
இவ்வாறு உள்ள குடியிருப்புகளில் ஆயிரகணக்கான மக்கள் உயிரை பணயம் வைத்து வாழ்ந்து கொண்டு உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் கட்டடத்தின் சுவர்கள் பலவீனமாகி வருகின்றன. இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
இது தொடர்பாக கட்கோபர் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், நாங்கள் வேறு எங்கு செல்வோம். இங்கு தான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது என்கிறார்.
இழப்பீடு
வீட்டை விட்டு உரிமையாளர்கள் வெளியேற சொன்னால், வேறு எங்கு செல்வது என்ற அச்சத்தில் வாடகைதாரர்கள் பயத்துடனேயே அங்கு வாழ்ந்து வருகின்றனர். சட்டப்படி, இழப்பீடு தருவதாக கூறிவிட்டு, வெளியேறிய பின்னால் அதனை அவர்கள் தராவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். வீட்டை மறுசீரமைப்பதன் மூலம் லாபம் பார்க்க நினைக்கும் உரிமையாளர்கள் எங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சில வாடகை தாரர்கள் சொல்கின்றனர். வேறு இடங்களில் அதிக வாடகை கொடுக்க வேண்டி உள்ளதால், இழப்பீடு கொடுத்தால் இங்கிருந்து வெளியேற தயார் என்கின்றனர்.
வீட்டு உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், வாடகை கட்டுப்பாட்டு சட்டங்கள் காரணமாக, நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் சந்தை விலையை விட குறைவாக தான் வாடகை கொடுக்கின்றனர். இதனால், பராமரிப்புக்கு கையில் பணம் இருப்பது இல்லை என்கின்றனர்.
அரசு வெளியேற உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில், சிலர் அதனை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு வாங்கி வருகின்றனர்.