ADDED : பிப் 22, 2024 11:22 PM
பனசங்கரி: குடும்ப பிரச்னையால், முதிய தம்பதி தங்கள் இல்லத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
பெங்களூரு, பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜ், இட்டமடு பிரதான சாலையில், கிருஷ்ணய்யா லே -- அவுட்டின், 19வது கிராசில் வசித்தவர் கிருஷ்ண நாயுடு, 84. இவரது மனைவி சரோஜம்மா, 74.
வீட்டின் மூன்றாவது மாடியில் தம்பதி; கீழ் தளத்தில் மகன் அசோக்குமார், மருமகள், பேரப்பிள்ளைகள் வசிக்கின்றனர். கிருஷ்ண நாயுடுவின் மகள் திருமணமாகி, வேறு இடத்தில் வசிக்கிறார்.
குடும்ப பிரச்னை காரணமாக, விரக்தியில் இருந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஒரு ஜன்னலில் கணவரும், மற்றொரு ஜன்னலில் மனைவியும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும், தம்பதி கதவை திறக்கவில்லை. எனவே மருமகள் மூன்றாவது மாடிக்கு சென்ற போது, மாமனாரும், மாமியாரும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பனசங்கரி போலீசார் விசாரிக்கின்றனர்.