தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் மூதாட்டி சுஜாதா பட்டும் 'பல்டி'
தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் மூதாட்டி சுஜாதா பட்டும் 'பல்டி'
ADDED : ஆக 29, 2025 02:40 AM

பெங்களூரு: 'தர்மஸ்தலா சென்ற என் மகள் காணாமல் போனதாக, போலீசில் நான் அளித்தது பொய் புகார் தான். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்' என, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம், சுஜாதா பட் கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது.
இவ்வாறு புகார் கூறிய சின்னையா, தான் பொய் புகார் அளித்ததாக கூறியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், 'தர்மஸ்தலாவுக்கு கடந்த 2002ல் சென்ற என் மகள் அனன்யா பட் காணாமல் போனார்.
அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்' என்று, உடுப்பியை சேர்ந்த சுஜாதா பட், 72 என்ற பெண், கடந்த 15ம் தேதி பெல்தங்கடி போலீசில் புகார் செய்தார்.
அங்கு பதிவான வழக்கு, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 26 மற்றும் 27ம் தேதி பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்தில், சுஜாதா பட் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று மூன்றாவது நாள் விசாரணைக்கு ஆஜரானார்.
சுஜாதா பட் குறித்து ஏற்கனவே உடுப்பி, ஷிவமொக்கா, குடகு, பெங்களூரில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்து தகவல் சேகரித்தனர்.
அந்த தகவலின்படி, சுஜாதா பட்டிற்கு திருமணம் ஆகவில்லை என்பதும்; அவருக்கு மகளே இல்லை என்பதும் தெரிந்தது. இதுதொடர்பான ஆதாரங்களை முன்வைத்து, நேற்று அவரிடம் விசாரித்த போது திக்குமுக்காடினார். கடைசியில், பொய் புகார் அளித்ததை ஒப்புக் கொண்டார்.
அவர் கூறியதாக எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது:
உடுப்பி மணிப்பால் மருத்துவமனை அருகே, எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.
அந்த இடத்தை தர்மஸ்தலாவுக்கு என் குடும்பத்தினர் தானமாக எழுதி கொடுத்தனர். அந்த இடத்தை திரும்ப தரும்படி கேட்ட போது, தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர்.
கோபத்தில் கோவில் நிர்வாகத்தினரை பழிவாங்க நினைத்து, போலீசில் பொய் புகார் அளித்தேன். தெரியாமல் செய்து விட்டேன்; தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்.
இவ்வாறு கூறி, கதறி அழுது உள்ளார்.
எஸ்.ஐ.டி., விசாரணையில் சின்னையா, சுஜாதா பட்டை பின்னால் இருந்து இயக்கியது, ராஷ்டிரிய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி மற்றும் அவரது குழு என்பது தெரிந்துள்ளது. சுஜாதா பட் பொய் புகார் அளித்திருப்பதால், அவரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.