காங்கிரஸ் ஆதரவு கடிதம் வரணும்; காத்திருக்கிறார் உமர் அப்துல்லா!
காங்கிரஸ் ஆதரவு கடிதம் வரணும்; காத்திருக்கிறார் உமர் அப்துல்லா!
ADDED : அக் 10, 2024 07:11 PM

ஸ்ரீநகர்: '' காஷ்மீரில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளித்ததும், கவர்னரை சந்தித்து உரிமை கோருவேன்,'' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார்.
காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.
இதனிடையே எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பிறகு உமர் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரசின் ஆதரவு கடிதத்திற்காக காத்து இருக்கிறோம். இது குறித்து அக்கட்சியுடன் பேச்சு நடக்கிறது. ஆதரவு கடிதம் கிடைத்த உடன் கவர்னரை சந்திப்போம். இன்று அல்லது நாளைக்குள் காங்கிரசின் ஆதரவு கடிதம் கிடைக்கும் என நம்புகிறோம்.
காஷ்மீரில் ஆட்சி அமைத்ததும், மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவோம். பிறகு டில்லி சென்று பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து பேசுவேன். அரசுக்கும், கவர்னருக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மாறாக மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை, மக்கள் நலனுக்காக பணியாற்ற அமைதியான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநில அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.