காஷ்மீர் மக்கள் மீது சந்தேக கண்ணோட்டம்; உமர் அப்துல்லா வருத்தம்
காஷ்மீர் மக்கள் மீது சந்தேக கண்ணோட்டம்; உமர் அப்துல்லா வருத்தம்
UPDATED : நவ 19, 2025 08:19 PM
ADDED : நவ 19, 2025 08:13 PM

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் ஒரு சிலரின் தொடர்பு காரணமாக காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: டில்லி கார் குண்டு வெடிப்பில், முக்கிய சந்தேக நபர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். பயங்கரவாத தாக்குதலில் ஒரு சிலரின் தொடர்பு காரணமாக காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப விரும்ப மாட்டார்கள். எல்லா பக்கங்களிலிருந்தும் நம்மை சந்தேகக் கண்களால் பார்க்கும்போது, நாம் வெளியே செல்வது கடினம் ஆகிவிடும் என்பது தெளிவாகிறது. டில்லியில் நடந்ததற்கு சிலர் மட்டுமே காரணம், ஆனால் அதற்கு நாம் அனைவரும் காரணம். நாம் அனைவரும் அதில் ஒரு பகுதியினர் என்று ஒரு கருத்து உருவாக்கப் படுகிறது.
டில்லியில் ஜம்மு காஷ்மீர் பதிவெண் கொண்ட வாகனத்தை ஓட்டுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது. என்னுடன் அதிக பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாதபோது, என் காரை வெளியே எடுக்கலாமா, வேண்டாமா என்று நானே யோசிக்கிறேன். யாராவது என்னை நிறுத்தி, நான் எங்கிருந்து வந்தேன், ஏன் அங்கு வந்தேன் என்று கேட்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
எந்த அளவு கண்டனம் தெரிவித்தாலும், அது மிகச் சிறியதாக இருக்கும். அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்வதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதிகள் அல்ல. மக்கள் ஒவ்வொருவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை. இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.

