ADDED : மார் 08, 2024 01:59 AM

தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் போது, ஒரு அப்பாவியை கொன்ற பாவத்தில் இருந்து விடுபட, 19ம் நுாற்றாண்டில் லிங்கராஜேந்திரா, 'ஓம்காரேஸ்வரா கோவில்' கட்டிஉள்ளார்.
குடகு மாவட்டம், மடிகேரியில் அமைந்துள்ளது ஓம்காரேஸ்வரா கோவில். இக்கோவில், கடந்த 1820ல், இரண்டாம் லிங்கராஜேந்திர மன்னரால் கட்டப்பட்டது.
கேரள கட்டட கலையில் சிவப்பு ஓடுகளாலும், இஸ்லாமிய பாணியில் குவிமாடங்களும் கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ள சிவன் சிலை, காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இரண்டாம் லிங்கராஜேந்திர மன்னர், தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்யும் போது, தற்செயலாக ஒரு அப்பாவி கொல்லப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அவர், அமைதி இழந்து, உறங்க முடியாமல் அவதிப்பட்டார். ராஜ புரோகிதர்களின் ஆலோசனைப்படி, தவறை நிவர்த்தி செய்ய கோவில் கட்ட திட்டமிட்டார்.
இதையடுத்து, ஓம்காரேஸ்வரா கோவில் கட்டினார். இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். அத்துடன் கோவிலின் மத்தியில், 60 அடி ஆழம் உள்ள பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. தெப்பக்குளத்தில் மத்தியில் சிறிய மண்டபம் அமைந்து உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் சென்று சுவாமியை தரிசிக்கலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரு, மைசூரில் உள்ள மடிகேரி டவுனுக்கு கார், பஸ்களில் செல்லலாம். அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோவில் அமைந்து உள்ளது.
விமானத்தில் செல்பவர்கள் பெங்களூரில் இருந்து மங்களூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து, 140 கி.மீ., தொலைவிலும்; பெங்களூரில் இருந்து மைசூருக்கு சென்று, அங்கிருந்து 120 கி.மீ., தொலைவு பயணித்தும் கோவிலை சென்றடையலாம்.
ரயிலில் செல்பவர்கள் சக்லேஸ்பரா, சுப்ரமண்யா சாலை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து கார், பஸ்சில் மடிகேரி செல்லலாம். இக்கோவிலில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் அப்பி நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. கோவில் அருகில் மடிகேரி கோட்டை, ராஜா சீட் அமைந்துள்ளது. மடிகேரியில் தங்கும் வசதிகளும் உள்ளன
- நமது நிருபர் -.

