தலைமை ஏற்க விரும்பும் மம்தா: ' இண்டியா ' கூட்டணி தலைவர்கள் சொல்வது என்ன?
தலைமை ஏற்க விரும்பும் மம்தா: ' இண்டியா ' கூட்டணி தலைவர்கள் சொல்வது என்ன?
UPDATED : டிச 07, 2024 10:30 PM
ADDED : டிச 07, 2024 06:35 PM

புதுடில்லி: ' இண்டியா ' கூட்டணிக்கு தலைமை ஏற்க திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், காங்., கம்யூ., கட்சிகள் ஆலோசித்து முடிவு செய்வோம் எனக்கூறியுள்ளன. மம்தாவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ' இண்டியா ' கூட்டணி என்ற பெயரில் ஒன்று கூடி உள்ளன. லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பிறகு ஏற்பட்ட கூட்டணி குழப்பம் காரணமாக ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 'தனியார் டிவி'க்கு அளித்த பேட்டி ஒன்றில் மம்தா கூறுகையில், ' இண்டியா' கூட்டணியை நான் தான் உருவாக்கினேன். கூட்டணியை தலைமையேற்று நடத்த தயாராக உள்ளேன் என்றார்.
பொதுவான நோக்கம்
இது தொடர்பாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா கூறியதாவது: என்ன அர்த்தத்தில் சொல்கிறார் எனக்கூறவில்லை. தேர்தலுக்கு பிறகு, ' இண்டியா ' கூட்டணி ஒரு முறை தான் கூடி ஆலோசனை நடத்தியது. கூட்டணியின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். பா.ஜ.,வை வீழ்த்துவதே பொதுவான நோக்கம். ஆனால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சூழ்நிலை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
ராகுலுடன் ஆலோசித்து
காங்கிரசின் சிங்தேவ் கூறியதாவது: அவருக்கு என தனி நோக்கம், தனிக் கருத்து உள்ளது. மம்தாவும் இண்டியா கூட்டணியின் உறுப்பினர். எந்த விவாதம் நடந்தாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக முடிவு எடுப்போம் என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், இண்டியா கூட்டணி தலைவராக நிதீஷ்குமாரும் விருப்பம் தெரிவித்தார். ஆனால், தலைமைப்பதவி குறித்து தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இதற்கு அனைத்து உறுப்பினர்களுடன் ஒரு மித்த முடிவு எடுக்க வேண்டும். யார் தலைமையேற்று நடத்துவது?, யார் கன்வீனர்? யார் ஒருங்கிணைப்பாளர் என்பது குறித்து ஒன்றாக முடிவு செய்வோம். கூட்டணிக்கு தலைமை ஏற்க ஒரு தலைவர் விரும்புவது இயற்கையானது. ஆனால், அது தனிப்பட்ட காரணங்களுக்காக இருக்கக்கூடாது என்றார். வேறு சில காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ராகுலுடன் ஆலோசனை செய்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.
ஆதரவு
சமாஜ்வாதி கட்சியின் உதய்வீர் சிங் கூறியதாவது: மம்தா மூத்த தலைவர். அவருக்கு அனுபவமும், திறமையும் உண்டு. அவருடனான கூட்டணி சிறந்த முறையில் உள்ளது. அவரது தலைமையை நாங்கள் நம்புகிறோம். கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். மம்தாவுக்கு ஆதரவாக முடிவு எடுத்தால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். என்றார்.
சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியதாவது: மம்தாவின் எண்ணம் எங்களுக்கு தெரியும். 'இண்டியா' கூட்டணியில் அவர் முக்கிய கூட்டாளியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மம்தாவாக இருந்தாலும் சரி, கெஜ்ரிவாலாக இருந்தாலும் சரி நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம். விரைவில் கோல்கட்டா சென்று மம்தாவை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தகுதி உண்டு
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் கூறுகையில், கூட்டணிக்கு தலைமை ஏற்க அவருக்கு தகுதி உண்டு. நாட்டின் முக்கியமான தலைவர் அவர். அவருக்கு என திறமை உண்டு. அவ்வாறு கூற அவருக்கு உரிமை உண்டு.
சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.