எந்த அடிப்படையில் மசோதாக்கள் மீது தமிழக கவர்னர் முடிவு எடுக்கிறார்? சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம்
எந்த அடிப்படையில் மசோதாக்கள் மீது தமிழக கவர்னர் முடிவு எடுக்கிறார்? சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம்
ADDED : பிப் 07, 2025 01:06 AM
புதுடில்லி:'மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, தமிழக கவர்னர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார்?' என்பது உட்பட பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் நேற்று எழுப்பியது.
பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, தமிழக கவர்னருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றும் நடந்தது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன் ஆகியோர், வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள், தமிழக அரசு தரப்பு மற்றும் கவர்னர் தரப்பு வழக்கறிஞர்களிடம் எட்டு முக்கிய கேள்விகளை எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டனர்.
நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:
சட்டசபை, ஒரு மசோதாவை நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கிறது. கவர்னர் அதை நிறுத்தி வைத்தால், அதே மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரிடம் சமர்ப்பிக்கும்போது, கவர்னர் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட அந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு, கவர்னருக்கு எத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன?
எந்த அதிகாரத்தின் நடைமுறையின்படி ஜனாதிபதிக்கு, கவர்னர் ஒரு மசோதாவை அனுப்பி வைக்கிறார்?
மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக, அரசியலமைப்பு சட்டத்தின் 200, 201 பிரிவுகளின் வரம்புகள் எந்த அளவிற்கு உள்ளன?
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால அளவை நிர்ணயிக்க முடியுமா?
ஒரு மசோதாவை கவர்னர் முறையாக திருப்பி அனுப்புகிறார். இரண்டாவது முறையாக அதே மசோதா அவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த முறை ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறார். மீண்டும் அதே மசோதாவை சட்டசபை நிறைவேற்றி அனுப்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவு, இதை எப்படி எடுத்தாள்கிறது?
ஜனாதிபதி, மசோதாவை
தொடர்ச்சி 9ம் பக்கம்
எந்த அடிப்படையில் மசோதாக்கள்...
7ம் பக்கத் தொடர்ச்சி
மீண்டும் கவர்னருக்கு அனுப்பி, சட்டசபையை முடிவெடுக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறார். அதே மசோதாவை கவர்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா?
ஒரு மசோதாவை கவர்னர் சட்டசபைக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார்; அதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்பதை கவர்னர் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமா, இல்லையா? அப்படி குறிப்பிடவில்லை என்றால், மாநில அரசால் எப்படி அதை சரி செய்ய முடியும்? இதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியபோது பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, ''பெரும்பாலான நேரங்களில் கவர்னர் அப்படி சொல்வதில்லை. வெறுமென அதை நிலுவையில் போட்டு வைப்பார் அல்லது காரணம் எதையும் குறிப்பிடாமலேயே நிராகரித்து விடுவார்,'' என்றார்.
அப்போது மீண்டும் மற்றொரு கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், 'என்ன விஷயங்களை குறிப்பிட்டு மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்ப முடியும்?' என்றனர்.
'அதற்கு சில பரிந்துரைகளை கொடுக்கலாம். குறிப்பிட்ட பிரிவுகளை சுட்டிக்காட்டி அதை மாற்ற அறிவுறுத்தலாம். சட்ட வரைமுறைகளுக்கு எதிராக இருக்கும் அம்சங்களை சுட்டிக் காட்டலாம். இந்த மூன்று விஷயங்களை மட்டும் தான் கவர்னரால் செய்ய முடியும்' என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள்:
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதை அறிவுறுத்தும் அரசியல் சாசன பிரிவின் முதல் உட்பிரிவை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை தான், கவர்னர் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், அந்த உட்பிரிவின்படி மசோதாவை நிராகரித்தாலோ, திருப்பி அனுப்பினாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதை கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என கவர்னர் தரப்பு கூறுகிறது.
கவர்னர், மசோதாக்கள் மீது அறிவுரை கூறும் ஆலோசகர் மட்டும் தானே தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
கவர்னர் தனக்கு இருக்கும் அதிகார வரம்பை ஒருமுறை பயன்படுத்தி விட்டார் என்றால், அதை அவர் ஒரு மசோதாவின் மீது மீண்டும் பயன்படுத்த முடியாது.
அதனால் தான், முதல் முறை ஒரு மசோதாவை அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்றால், அதே மசோதாவை இரண்டாவது முறையாக அரசு கவர்னருக்கு சமர்ப்பித்தால், அதை மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது எனச் சொல்கிறோம். மாறாக ஒப்புதல் அளிப்பது மட்டும் தான் அவருக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு.
கவர்னர், தன் கவனத்தை ஒரு மசோதாவின் மீது பயன்படுத்த வேண்டும். அதன் பின், இருக்கக்கூடிய சட்ட அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சூப்பர் சட்டசபையாக அவர் செயல்பட முடியாது.
கவர்னர் ஒன்றும் நீதிமன்றம் அல்ல; நீதிமன்றத்தின் வேலையை அவர் செய்ய முடியாது. பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரங்களில் கூட கவர்னர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என நினைக்கிறார். பல மசோதாக்கள் மீது இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிலுவையில் போட்டு வைக்கிறார்.
கவர்னர், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றால், அந்த இடத்தில் தலையிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றங்களின் கைகளை இந்த இடத்தில் யாரும் கட்டிப்போட முடியாது.
கவர்னர் என்பவர் அமைச்சரவை குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்; அவர் ஒரு முடிவெடுக்கிறார் என்றால், அவர் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளின்படி தான் எடுக்க முடியும்.
அரசியல் சாசனத்தின்படி, உயர்ந்த ஒரு பதவியில் இருக்கும் ஒரே நபர், ஒரு மாநிலத்தின் சட்டசபைக்கு எதிராக, அந்த சட்டசபைக்கு உறுப்பினர்களை அனுப்பும் மக்களுக்கு எதிராக செயல்படுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறான தவறுகளை செய்துவிட்டு, அதை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருப்பதையும் ஏற்க முடியாது.
இவ்வாறு தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கவர்னர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வாதங்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், ''தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும் போது, கவர்னர் மிகச் சிறிய ஒரு பதவியை மட்டுமே வகிக்கிறார்; அவருக்கென்று இந்த அதிகாரமும் இல்லை என்ற நிலையில் பேசி உள்ளனர்; ஆனால், உண்மை நிலையை அரசியல் சாசனத்தின்படி பார்க்க வேண்டி இருக்கிறது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
கவர்னரின் பதவியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கவர்னரின் செயல்பாடுகளை நாங்கள் கேள்வி கேட்க விரும்புகிறோம்.
மொத்தம் 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில், இரண்டு மசோதாக்களை முதலிலேயே அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். 10 மசோதாக்களை அரசுக்கு மீண்டும் அனுப்பிவிட்டு, அவர்கள் அதை கவர்னரிடம் மீண்டும் சமர்ப்பித்தபோது, அதை திரும்பவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இவையெல்லாம் ஏன் என்ற கேள்வி தான் எங்களுக்கு எழுகிறது. மேலும் பல மசோதாக்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். கவர்னரின் இந்த நடவடிக்கைகளை தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
'கவர்னர் பதவியே தேவையில்லை என்ற என்ற வாதங்கள் பல ஆண்டுகளாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசியல் சாசன பிரிவு 200, 201 இருக்கும் வரை கவர்னரின் பதவியை அகற்ற முடியாது' என, கவர்னர் தரப்பு வாதங்களை முன்வைத்த போது, மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், 'எங்களுக்கு பழைய வரலாறு எதுவும் தேவையில்லை. இந்த விவகாரத்தில் கவர்னரின் நடவடிக்கைக்கான நியாயமான காரணங்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்தனர்.
இதையடுத்து, கவர்னர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம்:
ஒரு மசோதா தவறாக இருக்கும் பட்சத்தில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் என கவர்னர் நினைத்தால், அவர் தன் சொந்த அறிவை பயன்படுத்தி, ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்கிறார். அதன் அடிப்படையில் தான் அவர் மசோதாவை நிறுத்தி வைக்கிறார். அரசுக்கு திருப்பி அனுப்புகிறார் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.
ஒரு சட்டசபை நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாவை நிராகரிக்கிறோம் என்றால், அதை நிச்சயமாக அந்த அரசு ஏற்காது. அதனால், தேவையில்லாமல் கால விரயம் செய்ய வேண்டாம் என்பதற்காகத் தான், மசோதாவை நிராகரிக்கும் போது அமைச்சரவை குழுவின் அறிவுரைகளை கவர்னர் தரப்பு கேட்பதில்லை.
இவ்வாறு வாதிடப்பட்டது.
'மசோதாவை கவர்னர் ஏன் நிராகரிக்கிறார், அதற்கான காரணங்கள் என்ன, இது தொடர்பாக அவர் யார் யாருடன் விவாதத்தை நடத்தினார், எந்த அறிவுரையின் அடிப்படையில் அவர் அதைச் செய்தார் என்பது உள்ளிட்ட விபரங்களை தான் நாங்கள் கவர்னரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்' என நீதிபதிகள் மீண்டும் கேட்டபோது, 'கவர்னர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும்' என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு, முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.