ADDED : ஜூலை 14, 2025 08:47 PM

பாலக்காடு; வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து, மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மணர்காடு பகுதியைச் சேர்ந்தவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்து, பணத்தை வாங்கி என்னை ஒருவர் ஏமாற்றியதாக, பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் உண்ணிகிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு படை நடத்திய விசாரணையில், மோசடி செய்தது கோழிக்கோடு மாவட்டம் கல்லுாருட்டி பகுதியைச்சேர்ந்த மனோஜ், 49, என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த மனோஜை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து, இன்ஸ்பெக்டர் உண்ணிகிருஷ்ணன் கூறியதாவது:
மாநிலத்தில் பல பகுதிகளில் நிறுவனம் நடத்தி இத்தாலி, ஜெர்மனி ஆகிய வெளிநாடுகளுக்கு வேலை வாக்குறுதி அளித்து, பணம் வாங்கி இவர் மோசடி செய்துள்ளார். தற்போது இவருக்கு எதிராக, 60க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் இவர், இதுபோன்ற மோசடிகள் நடத்தியுள்ளார்.
வெளிநாடு தொடர்புகளை பயன்படுத்தி, ஆன்லைன் படிப்புகளும் நடத்தி, இவர் ஏமாற்றி வந்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.