'நந்தினி' பால் பவுடரில் கலப்படம்; ஹைதராபாதில் ஒருவர் கைது
'நந்தினி' பால் பவுடரில் கலப்படம்; ஹைதராபாதில் ஒருவர் கைது
ADDED : டிச 11, 2024 11:55 PM
பெங்களூரு : 'நந்தினி' பெயரில், கலப்பட பால் பவுடரை விற்று வந்த நபரை, ஹைதராபாதில் பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக அரசு, பள்ளி மாணவர்களுக்கு 'ஷிர பாக்யா' திட்டத்தின் கீழ் பால் வழங்குகிறது. பள்ளிகளுக்கு கே.எம்.எப்.,பின் 'நந்தினி' பால் பவுடர் அனுப்பப்படுகிறது. இதை மதிய உணவு திட்ட ஊழியர்கள் சுடுநீரும் சர்க்கரையும் கலந்து, மாணவர்களுக்கு கொடுக்கின்றனர்.
இந்த திட்டத்தின் பால் பவுடரை வெளிச்சந்தையில் விற்கக் கூடாது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பால் பவுடரை, விதிமீறலாக வெளி நபர்களுக்கு விற்று பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கடுமையாக கருதிய உணவுத்துறை, ஆங்காங்கே சோதனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஹைதராபாதின் முஷிராபாத்தில் குடோன் ஒன்றில், கலப்படமான 'நந்தினி' பால் பவுடர், காலாவதியான பால் பவுடரை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.
பெங்களூரின் மத்திய மண்டல செயற்படை போலீசார், முஷிராபாத் சென்று நேற்று முன் தினம் குடோனில் சோதனை நடத்தினர்.
அங்கு கலப்படமான, காலாவதியான 'நந்தினி' பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். 330 கிலோ, 450 கிலோ அடங்கிய பால் பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதை பதுக்கிவைத்து விற்ற தாமோதர் யாதவ் என்பவரை கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.
பயன்படுத்துவதற்கு தகுதியற்ற பால் பவுடரை தாமோதர் யாதவ், அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். அவரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இதற்கு முன்பு இரண்டு முறை கைது செய்திருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர், மீண்டும் அதே முறைகேட்டில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிந்தது.