ADDED : டிச 24, 2024 06:30 AM

பெங்களூரு: ஆந்திராவின் நெல்லுாரைச் சேர்ந்தவர் அனில்குமார் ரெட்டி, 47. பெங்களூரு டின் பேக்டரியில் மசாஜ் சென்டர் நடத்தினார். அங்கு விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெங்களூரு அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியது தெரிந்தது. அனில்குமார் ரெட்டி கைது செய்யப்பட்டார். மசாஜ் சென்டருக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, ஜாமினில் அனில்குமார் வெளியே வந்தார். அவர் மீண்டும் விபசார தொழில் செய்து வந்தார். மஹாதேவபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவானது.
அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி, போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, ஒயிட்பீல்டு டி.சி.பி., சிவகுமார் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தயானந்தா ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் அனில்குமார் கைது செய்யப்பட்டார்.