ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்தும்போது எச்சரிக்கை!:வானிலையில் கவனம் செலுத்துவது அவசியம்
ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்தும்போது எச்சரிக்கை!:வானிலையில் கவனம் செலுத்துவது அவசியம்
ADDED : ஏப் 08, 2024 03:02 AM

புதுடில்லி:''ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும்போது, வானிலை தொடர்பான தகவல்களையும் விரிவாக கவனிக்க வேண்டும்,'' என, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார்.
லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாடு முழுதும் இந்த கோடைக்காலம் தீவிரமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளதாவது:
தற்போது ஏப்., 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை, நாடு முழுதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் எங்களுடன் ஆய்வு செய்தது. இது தொடர்பாக பல தகவல்களை பகிர்ந்துள்ளோம்; தொடர்ந்து தெரிவித்தும் வருகிறோம்.
எதிர்பார்ப்பு
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலம் தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் வெப்ப அலைகள் நீண்ட நாட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் - ஜூன் காலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்கொள்ள, பிரசாரம் மற்றும் ஓட்டுப் பதிவின்போது, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில் குடிநீர் வசதி, முதலுதவி வசதி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். நிழல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வானிலை பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதாரம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அவ்வப்போது தெரிவித்து, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்து வருகிறோம்.
நாங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பிரசாரம், பொதுக் கூட்டம், பேரணி போன்றவற்றை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை குறித்து பேசப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிக செலவு போன்ற விஷயங்களை கருத்தில் வைத்து, நாடு முழுதும் லோக்சபா, சட்டசபை உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தேர்தல் நடத்தும்போது, வானிலை தொடர்பான விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

