'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
ADDED : அக் 11, 2024 01:33 AM
திருவனந்தபுரம், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கு அளித்த ஒப்புதலை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
ஆலோசனை
சட்ட கமிஷன், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்திய இந்த குழுவினர், ஒரே நேரத்தில்தேர்தல் நடத்துவது தொடர்பாக, பல்வேறு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பித்தனர்.
கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான மசோதா, வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளாவில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் தீர்மானத்தை தாக்கல் செய்து, மாநில சட்டசபை விவகார அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பேசியதாவது:
ஒரே நாடு; ஒரே தேர்தல்திட்டம், நாட்டின்கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும். இது, பார்லி., ஜனநாயகத்தின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும். மேலும், நாட்டின் பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் இது வழிவகுக்கும்.
லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரு செலவாக, இந்த உயர்மட்டக் குழு பார்க்கிறது.
வலியுறுத்தல்
இது, ஜனநாயக விரோதமானது. தேர்தல் செலவுகளை குறைப்பதற்கும், நிர்வாகத்தை திறம்படச் செய்வதற்கும் பல்வேறு எளிய வழிகள் இருக்கின்றன. ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது.
இவ்வாறு அவர்பேசினார்.
இந்த தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதன்படி சில திருத்தங்களுடன், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.