அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு டில்லியில் ஒருவர் உயிரிழப்பு
அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு டில்லியில் ஒருவர் உயிரிழப்பு
ADDED : நவ 10, 2024 12:19 AM

புதுடில்லி: டில்லியில் உள்ள கபீர்நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேர், அங்கிருந்த ஸ்கூட்டியை திருடினர். அப்போது அங்கு வந்த நதீம் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரையும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு திருடிய ஸ்கூட்டியில் அருகில் உள்ள ஜோதி நகருக்கு சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த நதீம் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரையும் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து மூன்று தோட்டாக்கள் மற்றும் குற்றவாளிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷாநவாஸ் சிகிச்சைக்கு பின் குணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'குற்றவாளி ஒருவருக்கு நதீம் 10,000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.
'அதை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நதீமை துப்பாக்கியால் சுட்டார். இதில் அருகே நின்றிருந்த ஷாநவாசும் காயம் அடைந்தார்' என்றனர்.
இதற்கிடையே, ஜோதி நகர் பகுதிக்கு அடுத்த 10 நிமிடங்களில் சென்ற மூவரும், ராகுல் என்பவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.