ADDED : ஜூலை 20, 2025 02:42 AM
புதுடில்லி:பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த, ஒரு லட்சம் போஸ்டர்கள், பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:
டில்லி மாநகரில், மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்கள், பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலத்தில், 41,000 போஸ்டர்கள், 2,812 பதாகைகள் மற்றும் 4,733 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. கரோல் பாக் மண்டலத்தில், 14,922 போஸ்டர்கள், 3,209 பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், முதல்வர் ரேகா குப்தா உத்தரவுப்படி, நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகள் வைப்பதற்கான உரிமை ரத்து செய்யப்பட்டன.
ஷாஹ்தாரா வடக்கில் 4,852 பதாகைகள், தெற்கு மண்டலத்தில், 13,794 போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. நரேலா, சென்ட்ரல் மற்றும் நஜப்கர் ஆகிய மண்டலங்களிலும் சட்டவிரோத போஸ்டர், பதாகை மற்றும் விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
மத்திய மண்டலத்தில், 159 போஸ்டர்கள் மற்றும் 42 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல துணை ஆணையர்கள் சாலை மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.