45 பேர் பலியான சவுதி பஸ் விபத்தில் உயிர்தப்பிய ஒற்றை இந்தியர்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
45 பேர் பலியான சவுதி பஸ் விபத்தில் உயிர்தப்பிய ஒற்றை இந்தியர்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
UPDATED : நவ 17, 2025 06:31 PM
ADDED : நவ 17, 2025 04:42 PM

மதீனா: சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் டேங்கர் லாரி மோதி 45 பேர் பலியான விபத்தில் ஒரேயொருவர் மட்டும் உயிர் தப்பி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
சவுதி அரேபியாவில் முக்கிய இஸ்லாமிய நகரம் மதீனா. மெக்காவுக்கு அடுத்ததாக இஸ்லாமியர்களுக்கு புனித நகரமாக கருதப்படும் மதீனாவுக்கு அருகே பஸ் ஒன்றில் பலர் உம்ரா புனித பயணம் சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்.
மதீனாவுக்கு 160 கிமீ தொலைவில் முப்ரிபாத் என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்து 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர்.
மீட்புக்குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப்பணிகளில் இறங்கினர். அப்போது பஸ்சில் பயணித்தவர்களில் ஒருவரை தவிர, எஞ்சிய அனைவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவரை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் யார், பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது. அவரின் பெயர் முகமது அப்துல் சோயிப். 24 வயது வாலிபரான அவர், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். விபத்தின் போது பஸ் டிரைவர் அருகில் இருந்து உட்கார்ந்து பயணித்து இருக்கிறார்.
முகமது அப்துல் சோயிப் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் சவுதி பயணம் செய்ய ஏதுவாக தெலுங்கானா அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டுகளை விரைவில் வினியோகிக்கவும், தேவையான அவசர உதவிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

